தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மெட்ரிக் தேர்வில் சாதனை புரிவது எப்படி? ஆசிரியர்கள் ஆலோசனை

மெட்ரிக் தேர்வில் சாதனை புரிவது எப்படி? ஆசிரியர்கள் ஆலோசனை

மெட்ரிக் தேர்வில் சாதனை புரிவது எப்படி? ஆசிரியர்கள் ஆலோசனை


UPDATED : நவ 30, 2009 12:00 AM

ADDED : நவ 30, 2009 05:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2009 12:00 AM ADDED : நவ 30, 2009 05:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சியில் நடந்த ‘ஜெயித்துக்காட்டுவோம்’ நிகழ்ச்சியில் 10ம் வகுப்பு மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கிய ‘டிப்ஸ்’ வருமாறு:


மணிமேகலை, தமிழ் ( எல்.எம்.எச்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி): மாணவர்கள் படிக்கத் தேவையான ஆரோக்கியமான சூழலை பெற்றோர் ஏற்படுத்தித்தர வேண்டும். தமிழ் பாடத்தில் செய்யுள் பகுதிகளில் 62 மதிப் பெண்கள் என்பதால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பேராகிராப் வகை வினாவுக்கு செய்யுள் ஆசிரியர் பெயர், பாடல் வரிகளுடன் விடையளித்தால் முழு மதிப் பெண் கிடைக்கும்.


தனித்தனி ‘பாயிண்டு’களாக குறிப்பிடவும். நான்கு அதிகாரங்களையும் தெளிவாக தெரிந்திருந்தால் மதிப்பெண்களை அள்ளிச்செல்லலாம். உரைநடை பகுதிகளை புரிந்துகொண்டோலே எளிதாக விடையளிக்க முடியும்.துணைப்பாட பகுதியில் ஆசிரியர் பெயர், கதை மாந்தர்கள், உட்தலைப்பு மற்றும் முடிவுரை ஆகியவை கட்டாயமாக இடம் பெற வேண்டும். இலக்கண பகுதி, செய்யுள் பகுதியை புரிந்து படித்தால் முழு மதிப்பெண் பெற முடியும்.



ஸ்ரீதா, வேதியியல் (ஏ.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி): வேதியியல் என்றாலே மிகவும் சுவாரஸ்யமான பாடம். மனநிலை ஒருநிலைப்படுத்தி, பாடங்களை புரிந்து கொண்டு திட்டமிட்டு படித்தால் எளிதாக 100 மதிப் பெண்களை பெறலாம். பெரும்பாலானவர்களுக்கு பாடத்தை படிக்கும் முறை சரிவர தெரிவதில்லை. முதலில் படிக் கும்போது எதுவும் புரியாதது போன்று இருக்கும்; தொடர்ந்து படித்தால் எளிதாக புரிந்து கொள்ளலாம்.வேதிச் சமன்பாடுகளை நன்றாக நினைவில் வைத்துக் கொண்டால் எளிதாக விடை எழுதலாம். வேதியியல் விதிகளை நிரூபிக்கும்போது, பிழையின்றி இருந்தால் முழு மதிப்பெண்கள் கிடைக்கும். வேதிச் செயல்பாடுகளை திரும்பத்திரும்ப படித்தால், செயல்விளக்கமும் எளிதாகிறது. எனவே, ஒரு பேப்பரில் வேதிவிதிகள், சமன்பாடுகளை தனித்தனியாக எழுதி படிக்க வேண்டும். உலோகம் மற்றும் அலோக வகை பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.



வசந்தா ராணி, உயிரியியல் (எல்.எம்.எச்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி): உயிரியியல் பாடம் மிகவும் எளிதானது. உயிரியியல் பாடத்தில் திட்டமிட்டு படித்தாலே ‘சென்ட் டம்’ பெறலாம். பாடத்தை முழுமையாக படித்தால், அதிக மதிப்பெண் பெற்று முழுத்தேர்ச்சி பெறலாம். ஒவ்வொரு ‘யூனிட்’டுக்கும் தனித்தனி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எனவே, திட்டமிட்டு படிப்பது மிகவும் அவசியமானது. முக்கிய பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெறக்கூடிய யூனிட்களை தேர்ந்தெடுத்து தனிக்கவனம் செலுத்தினால், எளிதாக மதிப்பெண் பெறலாம். ஐந்து மதிப்பெண் பகுதியில் வரக்கூடிய வரைபடக் கேள்விகளுக்கு, தெளிவாக படம் வரைந்தாலே மூன்று மதிப்பெண் அளிக்கப்படுகிறது. சரியான பாகங்களை குறிப்பிட்டால் முழு மதிப்பெண் பெறலாம். முடிந்தளவு பென்சில் கொண்டு படம் வரைய வேண்டும்.



கலாவதி, சமூக அறிவியல் (ஏ.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி): எந்த பாடத்தையும் திட்டமிட்டு படித்தால் எளிதாக மனதில் பதியும். சமூக அறிவியல் பாடத்தில் வரலாற்று சம்பவங் கள், நிகழ்ந்த ஆண்டுகளை கட்டாயமாக குறிப்பிட வேண்டும். ஒரு மதிப் பெண் வினாக்களை தனியாக குறிப்பெடுத்துக் கொண்டு தினமும் படித்து பயிற்சி எடுக்க வேண்டும். கட்டுரை பகுதி வினாவில் ‘பத்தி’யாக எழுதாமல் தனித்தனி பாயிண்டுகளாக குறிப்பிட வேண் டும். வேறுபடுத்தி காட்டு வகை வினாவுக்கு அட்டவணையிட்டு எழுத வேண்டும். குடிமையியல் பாடத் தில் அன்றாட நிகழ்வுகளை மையமாக கொண்டு பாடங்கள் உள்ளது. தினசரி செய்தித்தாள்களை படித்தால் பொது அறிவு வளரும். இந்திய மற்றும் உலக வரைபட்டத்தில் முக்கிய பகுதிகள், ரயில், வான்வெளி பயண வழித்தடங்கள், மன்னர்களின் ஆட்சிகாலம் குறித்த பகுதிகளை அடிக்கடி எழுதிப் பார்த்து பயிற்சி பெற்றால், முழு மதிப் பெண்களை எளிதாக பெறலாம்.



உமா, ஆங்கிலம் (பி.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி): ஆங்கில பாடத்தில், கேள்விகளை புரிந்து பதிலளிக்க வேண் டும். இந்த பாடத்தில், முழு மதிப் பெண் தவறவிடுவது வினாவை புரிந்து பதிலளிக்காதததுதான். வினாக்களுக்கு விடையளிக்கும் முறையை வைத்தே மதிப்பெண் வழங்கப்படுகிறது. சரியாகவும், அழகாகவும் விடையளித்திருந்தால் முழு மதிப்பெண் பெறலாம். கேள்விகளை புரிந்து, பதிலளிப்பது, நிகழ்காலம், எதிர்காலம் சரியாக புரிந்து பதிலளிப்பது போன்றவை அதிக மதிப்பெண் பெறும் எளிய வழிமுறைகள். பெரிய வாக்கியத்தையும், தெளிவில்லாத வாக்கியம் எழுதுவதை தவிர்க்க வேண்டும். ஆங்கிலம் நன்கு தெரிந்த மாணவர்கள், விடைக் கேற்ப சொந்த உரைநடைகளை பயன்படுத்தலாம். மற்றவர்கள், தகுந்த பதிலை தவறில்லாமல் எழுதினாலே போதும். ‘பாராகிராப்’ வகை வினாக்களுக்கு பத்திகளாக பிரித்தும், ஒரு பக்கத்திற்குள் விடையளிக்க வேண்டும். கட்டுரை வினாக்களுக்கு துணைத்தலைப்புகளை போட்டு, கோடிட்டால், கூடுதல் மதிப்பெண் உண்டு. ஒரு மதிப்பெண் வினாவுக்கு புத்தகத்தை முழுமையாக படித்தாலே போதும்.



ராஜசேகர், இயற்பியல் ஆசிரியர் (எல்.எம்.எஸ்., பள்ளி, பொள்ளாச்சி):இயற்பியலில், அனைத்து பகுதிக்கும் முக்கியத்துவம் உண்டு. பாடங்களை திட்டமிட்டு படிப்பதானலே சதம் அடிக்க முடியும். முக்கிய வினாக் களை தேர்வு செய்து படிக்க கற்று கொள்ள வேண்டும். நேரத்தை சரியாக பயன்படுத்தினால், அனைத்து கேள்விகளுக் கும் விடையளிக்க முடியும். இரு மதிப்பெண் வினாக்களுக்கு முக்கிய ‘பாயிண்ட்’ களை மட்டுமே எழுத வேண்டும். அறிவியல் அறிஞர்களின் பெயர்களை தவறாமல் குறிப்பிட்டால், அதற்கு மட்டும் அரை மதிப்பெண் வழங்கப்படும்.


மூன்று மதிப்பெண் வினாவுக்கு முக்கிய கருத்தை எழுத வேண்டும். தேவையில்லாத ‘பாயிண்டு’களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். கேள்வியை புரிந்து அதற்கு தகுந்தாற்போன்று விடையளிக்க வேண்டும். வரைபட வினாவுக்கு படம் வரைந்தால் மட்டுமே முழு மதிப்பெண் கிடைக்கும். வேறுபாடு அளித்தல் வகை கேள்விகளுக்கு அட்டவணையிட்டு விடையளித்தால், எளிதாக மதிப்பெண்களை தட்டிச் செல்லாம். புத்தகத்தை முழுவதுமாக படித்து, வினாக்களுக்கேற்ப விடையளித்தால், இயற்பியலில் ‘சென்டம்’ அடிக்கலாம்.


மகாதேவன், கணிதம் (ஏ.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி): கணக்கில், வரைப்பட வினாவுக்கு விடையளிக்கும் போது சரியான அட்டவணை, புள்ளிகளை முறையாக குறித்தல், வரைபடத்தின் பெயரை எழுதுதல், அளவு திட்டம் மற்றும் தீர்வு ஆகியவை முறையாக குறிப்பிட வேண்டும்.அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களுக்கும் வரிசையாக விடையளிக்க வேண்டும். வினாவுக்கு விடை தெரியாவிட்டால், வினா எண்ணை எழுதிவிட்டு இறுதியில் விடுபட்ட விடைகளை எழுத வேண்டும்.


ஒரு வினாவுக்கு இரண்டு விடைகள் எழுதுவதோ, எழுதிய பின் மாற்றி எழுதுவதோ கூடாது. இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு பயன்படுத்தும் சூத் திரங்களை ‘கருப்பு’ நிற பேனாவால் எழுதினால் சிறப்பாக இருக்கும். கணக்கை ஒரு முறை போட்டவுடன், அதன்மேல் மீண்டும் எழுதுவது கூடாது. மதிப் பெண் இழக்க வாய்ப்புண்டு. நன்கு தெரிந்த மற்றும் எளிதாக இருக்கக்கூடிய வினாக்களை தேர்வு செய்ய வேண்டும். வினாத்தாளை படிக்க ஒதுக்கப்படும் 15 நிமிடத்தில் படித்து பார்க்க வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால், கணிதத்தில் சதம் அடிப்பது நிச்சயம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us