தொடக்க கல்வித் துறைக்கு 2,039 இடைநிலை ஆசிரியர் தேர்வு
தொடக்க கல்வித் துறைக்கு 2,039 இடைநிலை ஆசிரியர் தேர்வு
UPDATED : டிச 05, 2009 12:00 AM
ADDED : டிச 05, 2009 04:34 PM
சென்னை: தொடக்க கல்வித் துறையில் புதிதாக 2,039 இடைநிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான கவுன்சிலிங், டிச. 9ம் தேதி 15 மையங்களில் நடக்கிறது.
இதுகுறித்து, தொடக்க கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் கூறியிருப்பதாவது:
தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநில வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் 2,039 பேர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 760 பேர் ஆண்கள்; 1,279 பேர் பெண்கள்.
இவர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், அவர்களின் இருப்பிட முகவரியின் அடிப்படையில், அந்தந்த மாவட்டங்களில் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். இந்த கவுன்சிலிங், 15 மாவட்டங்களில் நடக்கின்றன. பிற மாவட்டங்களில் இருந்து தேர்வு பெற்ற பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு 10ம் தேதியும், ஆண்களுக்கு 11ம் தேதியும், திருச்சி பிஷப் ஹூபர் மேல்நிலைப் பள்ளியில் பணி நியமன கவுன்சிலிங் நடைபெறும்.
உடல் ஊனமுற்றவர்களுக்கு முதலிலும், அவர்களைத் தொடர்ந்து பெண்களுக்கும், அதன்பின் ஆண்களுக்கும், பணி நியமன இடங்களை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும். குறிப்பிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள், வேறு மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களை தேர்வு செய்ய விரும்பினால், அவர்கள் 10 மற்றும் 11ம் தேதியில் திருச்சியில் நடக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
பணியிட ஒதுக்கீடு பெறும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணிபுரிய உள்ள மாவட்டத்தின் தொடக்கக் கல்வி அலுவலர்களால் 14ம் தேதி பணிநியமன ஆணைகள் வழங்கப்படும். இந்த கவுன்சிலிங்கில் திருவண்ணாமலை, துõத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்களும் கலந்து கொண்டு, இடங்களை தேர்வு செய்யலாம். ஆனால், தேர்தல் விதி காரணமாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட மாட்டாது. தேர்தல் முடிந்தபின், வேறொரு நாளில் பணி நியமன ஆணை வழங்கப்படும். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.
பதினைந்து மாவட்டங்களில், கவுன்சிலிங் நடக்கும் மையங்களின் விவரம் வருமாறு:
1. கோவை - புனித காணிக்கை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோவை.
2. கடலூர் - கிருஷ்ணசாமி மெமோரியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, கடலூர்.
3. தர்மபுரி - அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, தர்மபுரி.
4. ஈரோடு - அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம், ஈரோடு.
5. காஞ்சிபுரம் - டி.இ.இ.ஓ., அலுவலகம், காஞ்சிபுரம்.
6. கிருஷ்ணகிரி - மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கிருஷ்ணகிரி.
7. நாகை - டி.இ.இ.ஓ., அலுவலகம், நாகை.
8. பெரம்பலூர் - தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரி, பெரம்பலூர்.
9. புதுக்கோட்டை- அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி, மச்சுவாடி, புதுக்கோட்டை.
10. சேலம் - சிறுமலர் ஆரம்பப் பள்ளி, நான்கு ரோடு, சேலம்.
11. திருவள்ளூர் - புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளி, ஆவடி.
12. திருவாரூர் - ஆர்.சி.பாத்திமா நடுநிலைப் பள்ளி, திருவாரூர்.
13. திருவண்ணாமலை - டி.எம்.டவுன் ஆரம்பப் பள்ளி, தி.மலை.
14. வேலூர் - அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, வேலூர்.
15. விழுப்புரம் -முதன்மைக் கல்வி அலுவலகம் (புதிய பஸ் நிலையம் பின்புறம்), விழுப்புரம்.
