தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவை குளங்கள்: பள்ளி மாணவியர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கோவை குளங்கள்: பள்ளி மாணவியர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கோவை குளங்கள்: பள்ளி மாணவியர் ஆய்வில் அதிர்ச்சி தகவல்


UPDATED : டிச 17, 2009 12:00 AM

ADDED : டிச 17, 2009 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2009 12:00 AM ADDED : டிச 17, 2009 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவையை சுற்றிலுமுள்ள குளங்களில் நச்சுத்தன்மை அதிகரித்து வருவதால் நுண்ணுயிர்கள், பறவைகள் கூட பயன்படுத்த முடியாத அளவுக்கு இதன் தண்ணீர் மாறி வருகிறது.


நுண்ணுயிர்கள் உயிர் வாழ்வது தடுக்கப்பட்டால் நாளடைவில் குளங்களும் அழிந்து விடும் அபாயம் உருவாகி வருவதாக, பி.எஸ்.ஜி.ஜி.கன்யா குருகுலம் பள்ளி மாணவியர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரை, இம்மாத இறுதியில் தேசிய அளவில் நடைபெறும் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.


இப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவியர் சங்கீதா, சித்ரகலா, எலன்,கீதா, சாருலதா ஆகிய மாணவியர் ஆய்வில் ஈடுபட்டனர். பள்ளி ஆசிரியை செல்வி, தலைமை ஆசிரியர் பத்மாசனி வழிகாட்டுதலின்படி, கோவையில் உள்ள முக்கிய குளங்களின் நச்சுத்தன்மை பற்றி மாணவியர் ஆய்வு நடத்தினர்.


சிங்காநல்லூர் குளம், உக்கடம் பெரிய குளம், முத்தண்ணன் குளம், கண்ணம்பாளையம் குளம், சூலூர் சின்னகுளம், சூலூர் பெரிய குளம் ஆகிய ஆறு குளங்களில் உள்ள தண்ணீரை சேகரித்து பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, வேளாண் பல்கலை ஆய்வகங்களில் பரிசோதித்தனர்.
குளக்கரைகளில் வசிக்கும் மக்களிடம், குளத்து தண்ணீரின் தன்மைகள், அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள், பறவைகளின் வருகை, சுத்தம் செய்ய கிருமி நாசினி பயன்படுத்தப்படுவது, இங்குள்ள மீன்கள் விற்கப்படுவது உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி கேட்டறிந்தனர்.


ஆய்வு முடிவுகள் பற்றி இம்மாணவியர் மற்றும் வழிகாட்டி ஆசிரியை செல்வி ஆகியோர் கூறியதாவது:
கோவை மற்றும் சுற்றியுள்ள குளங்களின் தண்ணீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசு அடைந்து வருகின்றன. நீரின் மாசு தன்மையை, அதில் உள்ள பி.எச். அளவு நிர்ணயிக்கிறது. சாதாரணமாக 6-8.5 வரை இருக்கும் இந்த அளவு, கோவை குளங்களில் சேகரிக்கப்பட்ட நீரில் 10.04 ஆக உள்ளது.


அதிக குளோரைடு உள்ளது. இது, கழிவுகள், தொழிற்சாலை கழிவுகளால் நீர் மாசடைந்துள்ளதை குறிக்கிறது. சாதாரணமாக ஒரு லிட்டரில் 50-100 மி.கி. இருக்க வேண்டும். இக்குளங்களில் அதிகபட்சமாக 559.82 மி.கி. உள்ளது. நீரில் கன உலோகங்களின் அளவு கூடினால் அபாயகரமான நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். உணவுச் சங்கிலியையும் பாதிக்கும்.


இவற்றை உணவாக உட்கொள்ளும் மீன்கள், பறவைகள் மூலம் மனிதனின் உடலிலும் சேர்கிறது. உதாரணமாக, அதிக அளவிலான காரீயம், நம் உடலில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கையை குறைத்து கிட்னி, மூளை போன்றவை பாதிக்கிறது. இதற்கான பரிசோதனை கோவை வேளாண் பல்கலையில் நடத்தப்பட்டது.


ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அனைத்து பண்புகளும், குளத்தில் வாழும் உயிரினங்களுக்கு ஏற்றதாக இல்லை. நீரின் கலங்கல் தன்மை அதிகமாக இருந்தால் தாவர நுண்ணுயிரிகளுக்குத் தேவையான சூரிய ஒளி, ஆக்சிஜன் கிடைக்காது. இதனால் அவற்றின் சுவாசிக்கும் திறன் குறைவதால் உற்பத்தியும் குறையும். சாதாரணமாக ஒரு லிட்டரில் 200-300 மில்லி கிராம் ஆக இருக்க வேண்டிய ஆக்சிஜன் அளவு(சி.ஓ.டி), 400-2,000 மி.கி., ஆக உள்ளது. கால்சியம்,மெக்னீசியம், பாஸ்பேட், நைட்ரேட் அளவு அதிகமாக உள்ளது.


நீரில் வாழும் நாரை, விலங்கு நுண்ணுயிரிகளின் வாழ்க்கை முறையை இது பாதிக்கும். இவற்றை விரைவாக சரி செய்யாவிட்டால் அனைத்து குளங்களும் அழியும் ஆபத்து உள்ளது. குளங்கள் மாசு அடைந்துள்ளதால் நீர்நிலைகளுக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை, 2004, 2006 ஆகிய ஆண்டுகளை விட குறைந்து வருகிறது.


தீர்வு என்ன?: தண்ணீர் ஆதாரங்கள் குறைந்து வருகின்றன. மீதமுள்ள குளங்களையாவது பாதுகாக்க, அரசுடன் பொதுமக்களும் பாடுபட வேண்டும். வீட்டு கழிவு நீரை சுத்திகரித்து தோட்டத்துக்கு பயன்படுத்தலாம். தொழிற்சாலை கழிவு நீரை கண்டிப்பாக சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். மழைக்கு ஆதாரமான மரக்கன்றுகளை அதிகளவில் நட்டு வளர்க்க வேண்டும்.


குளங்களில் கழிவு, குப்பைகள் கொட்டக் கூடாது. மீறுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். குளக்கரையோர குடிசைப் பகுதிகளில் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். குளங்களில் சாக்கடை நீர் கலக்காமல் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.   


மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் 163 ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றன. மாநில அளவில் இடம் பெற்ற கன்யா குருகுலம் பள்ளி, அமிர்தா பள்ளிகளின் ஆய்வுக் கட்டுரைகள், டிச., 27-31 வரை அகமதாபாத் சயின்ஸ் சிட்டியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான அறிவியல் மாநாட்டிலும் பங்கேற்கின்றன.


தேசிய மாநாட்டுக்கு தேர்வு பெற்று கோவைக்கு பெருமை சேர்த்த இப்பள்ளி மாணவியர், ஆசிரியை செல்வி, மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் நடராஜன் ஆகியோரை கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us