மருத்துவக் கல்லூரியில் ஊழலை குறைக்கவே நீட் தேர்வு: அண்ணாமலை
மருத்துவக் கல்லூரியில் ஊழலை குறைக்கவே நீட் தேர்வு: அண்ணாமலை
UPDATED : ஜூன் 13, 2023 12:00 AM
ADDED : ஜூன் 13, 2023 03:57 PM
சென்னை
: நீட் தேர்வு வருவதற்கு முன் மருத்துவ சேர்க்கை முறைகேடு நிறைந்ததாக இருந்தது எனவும் மருத்துவக் கல்லூரியில் ஊழலை குறைக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது எனவும் தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னையில் நிருபர்களுக்கு அண்ணாமலை அளித்த பேட்டி:
ஊழல் செய்வதற்காக திமுக.,வினரால் 2006 முதல் 2011 வரை ஆட்சி காலத்தில் அதிகமான தனியார் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டன. நீட் தேர்வுக்கு முன் மருத்துவ கல்லூரிகள் கவுன்சிலில் ஊழல்கள் அதிகம் நடந்தன.
நீட் தேர்வு வருவதற்கு முன் மருத்துவ சேர்க்கை முறைகேடு நிறைந்ததாக இருந்தது. மருத்துவக் கல்லூரியில் ஊழலை குறைக்கவே நீட் தேர்வு. ஏழை மாணவர்களும் பயன் பெற வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மருத்துவ கவுன்சில் குறித்து பேச திமுகவுக்கு எந்த வித அருகதையும் கிடையாது. ஆற்காடு வீராமியே தனியார் மருத்துவ கல்லூரிகள் குறித்து குறை கூறியிருக்கிறார் என அண்ணாமலை கூறினார்.
பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து நிருபர்களின் கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்ததாவது:
அமித்ஷா மிக தெளிவாக பேசி இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி, 39 சீட்டுகளில் வெற்றி பெற வேண்டும். குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.இது குறித்து வருகிற காலங்களில் தலைவர்கள் பேசுவார்கள்.இன்னும் காலங்கள் இருக்கிறது. 2024ம் ஆண்டு பிரதமர் மோடி வெற்றி பெற உள்ள 400 தொகுதிகளில் நாமும் இருக்க வேண்டும். திமுக அளவு இரண்டு ஆண்டுகளில் மக்களின் அவப்பெயரை யாரும் பெற்றது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊழலை பொறுத்தவரையில் கடந்த 1991 முதல் 1996 வரையிலான ஆட்சி காலம் மோசமானவை என்பதை நீங்கள் ஒப்பு கொள்வீர்களா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்ததாவது:
தமிழகத்தில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன.தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர். அதனால்தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழகத்துக்கு முதலிடம் என்று கூட சொல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
