UPDATED : ஜூன் 14, 2023 12:00 AM
ADDED : ஜூன் 14, 2023 09:40 AM
புதுச்சேரி என்.சி.சி., மாணவர்கள் 60 பேர் பாய்மர படகு மூலம் சமுத்திர பராக்கிரம் என்ற தலைப்பில் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இருந்து காரைக்கால் சென்று திரும்பும் கடல் சாகச நிகழ்வு கடந்த 2ம் தேதி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். காரைக்கால் சென்ற சாகச குழுவினர் பயணத்தை நிறைவு செய்தனர்.கவர்னர் தமிழிசை மாணவர்களை வரவேற்று பேசியதாவது:
புதுச்சேரியில் நல்லெண்ணத்துடன் முதல்வர் எதை துவக்கி வைத்தாலும், எவ்வளவு சவாலான நிகழ்வாக இருந்தாலும் சரி அதனை கவர்னராக நிறைவு செய்வேன். கடல் சாகச பயணத்தில் 60 பேரில் 25 பெண்கள் கலந்து கொண்டு 10 நாட்கள் கடலில் பயணம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பல இரவுகள் கடல் மார்க்கமாக பயணம் செய்து, பல இடங்களில் தங்கி பயணத்தை மேற்கொள்வது பெண்களுக்கு சற்று கூடுதல் சிரமமாக இருக்கும். சாதனையை முடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கடல் சாகசம் செய்த மாணவர்கள் கடற்கரை சுத்தம் செய்து, பிளாஸ்டிக் அகற்ற விழிப்புணர்வு, ரத்த தானம் வழங்கி உள்ளனர். கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றாவிட்டால் 2050ம் ஆண்டு மீன்களை விட கடலில் பிளாஸ்டிக் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் சவால்கள் இருக்க வேண்டும். அதன் உடனே வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.இளைஞர்கள் வாழ்க்கையில் சவால்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். சுய சார்பு மூலம் விமானம், ராணுவ தளவாடங்கள் இந்தியாவில் தயாரிப்பது நாடு முன்னேறி வருகிறது என்பதிற்கு சான்று. வரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி இன்னும் அதிக உத்வேகத்துடன் நடைபெற வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ., என்.சி.சி., தலைமை அலுவலக குரூப் கமாண்டர் சோம்ராஜ் குலியா, கடலோரக் காவல் படைப்பிரிவின் துணை தலைமை அதிகாரி அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
