UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 03:16 AM
கோடை விடுமுறைக்கு பின் கடந்த வாரம் பள்ளிகள் திறக்கவிருந்த நிலையில் வெயில் சுட்டெரித்ததால் ஒரு வாரம் தாமதமாக கடந்த 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அன்றைய தினம் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான, மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு வந்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் உற்சாகமாக வரவேற்றது. குறிப்பாக, அமைந்தகரை, மஞ்சக்கொல்லை பகுதியில் உள்ள, சென்னை மாநகராட்சியின் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில், மாணவர்களை கவரும் வகையில் மேளதாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.மிக்கி மவுஸ் போன்ற கார்ட்டூன் உடைகளுடன், மழலையர் மாணவர்களை வரவேற்று அவர்களுக்கு பலுான்கள், சாக்லேட்கள் வழங்கி வகுப்புகளுக்கு அழைத்து சென்றனர். மேலும், தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் பள்ளியில் அலங்காரங்கள் செய்யப்பட்டன. இந்த வரவேற்பை, பெற்றோர் வெகுவாக பாராட்டினர்.தனியார் பள்ளிக்கு நிகராக, அரசு பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்கிறோம். குறிப்பாக, சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனர் (கல்வி) சரண்யா ஹரி அறிவுறுத்தல்படி, தொடக்கப் பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என தலைமை ஆசிரியை குணா செல்வி கூறினார்.
