UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 03:19 AM
மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, தற்போது புதிய கல்வியாண்டு துவங்கியுள்ளது. இரு முறை பள்ளி திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டு கடந்த, 12ம் தேதி முதல் கற்பித்தல் பணிகள் துவங்கின. பள்ளிக்கு வந்த மாணவர்களை, பூங்கொத்து அளித்தல், இனிப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முறைகளில், ஆசிரியர்கள் வரவேற்று உற்சாகப்படுத்தினர். கோவை மாவட்டத்தில் மொத்தம், 2 ஆயிரத்து 47 பள்ளிகள் உள்ளன. இதில், 786 அரசு நடுநிலைப்பள்ளிகள், 278 உயர்நிலை மற்றும் 91 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்புக்கு வந்தனர்.முதல்நாளில், 88-90 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆப்சென்ட் மாணவர்களை உடனே தொடர்பு கொள்ள, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தினசரி மாணவர் வருகைப்பதிவு, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.தொடர்பு கொள்ளணும்
முதன்மை கல்வி அலுவலர் சுமதி கூறுகையில், பள்ளிக்கு வராத மாணவர்களை உடனே தொடர்பு கொண்டு, முழு வருகைப்பதிவுக்கு உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இடைநிற்றல் தடுக்கும் வகையில் வாரத்தில் மூன்று நாட்கள் பள்ளிக்கு வராதோர் பட்டியல் உடனடியாக அந்தந்த வட்டார ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
