தனியார் கல்லூரிகளில் இடம், அரசு கல்லூரிகளுக்கு இல்லை
தனியார் கல்லூரிகளில் இடம், அரசு கல்லூரிகளுக்கு இல்லை
UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM
ADDED : ஜூன் 16, 2023 02:04 PM
தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் பேராசிரியர் பணியிடங்கள், மருத்துவ உட்கட்டமைப்பு போன்றவற்றின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும், மருத்துவ கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் மற்றும் கூடுதல் இடங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, மருத்துவ கட்டமைப்புக்கு ஏற்ப, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கூடுதல் இடங்களுக்கு விண்ணப்பித்தன. அதில், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இந்தாண்டு கூடுதலாக 450 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைத்துள்ளன.இதன் வாயிலாக 19 தனியார் மருத்துவ கல்லுாரிகளின் மொத்த இடம் 3,500 இடங்களாக அதிகரிக்கிறது. அதேநேரம் 36 அரசு மருத்துவ கல்லுாரிகளில் 5,050 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில் ஒரு கல்லுாரியில் கூட மருத்துவ இடங்கள் இந்தாண்டு உயரவில்லை. அதேநேரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில் 50 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன.எனவே இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியின் இந்தாண்டு மாணவர் சேர்க்கை 175 ஆக உயர்ந்துள்ளது.இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்க அதிகாரிகள் கூறுகையில், அரசு மருத்துவ கல்லுாரிகளில் போதியளவில் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. மற்ற மாநிலங்களை விட, மருத்துவ துறையில், தமிழகம் முன்னோடியாக உள்ளது என்றனர். அகில இந்திய கவுன்சிலிங் மற்றும் மாநில கவுன்சிலிங் இரண்டும் ஒரே நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம், அடுத்த வாரம் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
