பாட புத்தக திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் வேறு நோக்கம்?
பாட புத்தக திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் வேறு நோக்கம்?
UPDATED : ஜூன் 17, 2023 12:00 AM
ADDED : ஜூன் 17, 2023 09:09 AM
பள்ளி கல்வி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுக்கு, சில கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது. இந்த எதிர்ப்பின் பின்னணியில் கல்வியைத் தவிர வேறு நோக்கம் இருப்பதாக தெரிகிறது என யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு தலைவர் ஜகதீஷ் குமார் விளக்கம் தெரிவித்துள்ளார்.பள்ளி கல்விக்கான பாடப் புத்தகங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் வடிவமைக்கிறது. இந்த பாடப் புத்தகங்கள், மத்திய கல்வி வாரியம் உட்பட பல கல்வி வாரியங்களில் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா காலத்தில் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானதால், குறிப்பிட்ட பாடப் புத்தகங்களில் சில பிரிவுகள் திருத்தப்பட்டன. சில பிரிவுகள் நீக்கப்பட்டன. இவை, அரசியல் ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. சுவராஜ் இந்தியா கட்சித் தலைவரான யோகேந்திர யாதவ், கல்வியாளர் சுஹாஸ் பால்ஷிகார் உள்ளிட்ட 73 கல்வியாளர்கள் சமீபத்தில், என்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் தினேஷ் சக்ளானிக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில், பாடப் புத்தகங்களில் அதிக திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், கல்வி ஆலோசகர் என்று எங்கள் பெயரை குறிப்பிட வேண்டாம் என, அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதற்கு என்.சி.இ.ஆர்.டி., சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் யு.ஜி.சி., தலைவர் ஜகதீஷ் குமார் கூறியதாவது:
பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் மற்றங்களுக்கு சமீப காலமாக சில கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; இந்த எதிர்ப்பு தேவையற்றது. அவர்களது எதிர்ப்பில் எந்த நியாயமும் இல்லை. இந்த எதிர்ப்பின் பின்னணியில், கல்வியைத் தவிர வேறு நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. இந்த விஷயத்தில், என்.சி.இ.ஆர்.டி., ஏற்கனவே தெளிவான விளக்கம் அளித்து விட்டது. பாடப் புத்தகங்களில் என்.சி.இ.ஆர்.டி., மாற்றம் செய்வது, இது முதல் முறையல்ல. குறிப்பிட்ட கால இடைவெளியில் இது போன்ற திருத்தங்கள், மாற்றங்கள் செய்வது வழக்கமாக நடப்பது தான். கல்வியாளர்கள், நிபுணர்களின் ஆலோசனை மற்றும் கருத்துகளை கேட்டுத் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில், மாணவர்களின் பாடச் சுமையை குறைக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாகவும், இது தற்காலிகமானது தான் என்றும் என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
