UPDATED : ஜூன் 17, 2023 12:00 AM
ADDED : ஜூன் 17, 2023 09:14 AM
திருத்தணியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் தரணிவராகபுரம் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர், முருக்கம்பட்டு பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் இருவரும், நேற்று முன்தினம் பள்ளி முடிந்து மாலையில் ஒரே பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது, இரு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டு பேருந்தில் சென்றனர். இரு மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் பேருந்தை விட்டு, இறங்கி அவரவர் வீட்டிற்கு சென்றனர். தொடர்ந்து, இரவு 9:30 மணிக்கு மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, முருக்கம்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர். மேலும் இரு ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில், மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை வழங்கினர். டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:
படிக்கும் மாணவர்கள், கல்வி கற்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து படித்து, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும். பள்ளி பருவம் திரும்ப கிடைக்காது. கல்வி கற்றால் தான் வாழ்க்கையில் உயர்ந்த பதவி அடையலாம். எனவே மாணவர்கள் வன்முறைகளில் ஈடுபடக்ககூடாது.இவ்வாறு அவர் பேசினார்.
