உலக செஸ் சாம்பியன் போட்டி அரியலுார் சிறுமிக்கு வெண்கலம்
உலக செஸ் சாம்பியன் போட்டி அரியலுார் சிறுமிக்கு வெண்கலம்
UPDATED : ஜூன் 19, 2023 12:00 AM
ADDED : ஜூன் 19, 2023 04:32 AM
உலக சதுரங்க கழகம் சார்பில், ஜார்ஜியா நாட்டில் 8 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக சதுரங்க சாம்பியன் போட்டி 6 - 12ம் தேதி வரை நடந்தது. அதில் பல நாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் சர்வானிகா, 8 என்ற மாணவி விளையாடினார். மொத்தம் 11 சுற்றுகளில் எட்டு சுற்றுகளில் வெற்றி பெற்று, உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். நேற்று அவர், குருவாயூர் எக்ஸ்பிரஸ் மூலம் அரியலுார் ரயில் நிலையத்திற்கு பெற்றோருடன் வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதுகுறித்து சர்வானிகா கூறியதாவது:
கிர்கிஸ்தான் நாட்டில் வரும் 30ம் தேதி முதல் ஜூலை 10ம் தேதி வரை, மேற்கு ஆசிய இளைஞர் செஸ் போட்டி நடக்கிறது. இதற்கு 1.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும். போதிய பண வசதி இல்லாததால் இந்த போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்க முடியவில்லை.காமன்வெல்த் மற்றும் உலக சதுரங்க சாம்பியன் போட்டிகளில் பங்கு பெற மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி அளித்தால், சிறப்பாக விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன். தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து, எனக்கு உதவி செய்ய கோரிக்கை வைத்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
