விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும்: அமைச்சர் பொன்முடி
விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும்: அமைச்சர் பொன்முடி
UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM
ADDED : ஜூன் 20, 2023 11:55 AM
விழுப்புரம் மாவட்டத்தில், முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மஸ்தான், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணைச் சேர்மன் ஷீலா தேவி சேரன், ஒன்றிய சேர்மன்கள் சச்சிதானந்தம், ஓம் சிவசக்திவேல், சி.இ.ஓ., அறிவழகன், பல்கலைக் கழக பொறியியல் கல்லுாரி முதல்வர் செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு 45 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்திட விளையாட்டுத் துறையில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்று முதலமைச்சர் கோப்பை போட்டியாகும். விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான போட்டிகள் கடந்த பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 5ம் தேதி வரை நடந்தது. இப்போட்டிகளில் பள்ளி, கல்லுாரி, பொதுப்பிரிவினர், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என 5 பிரிவுகளில் 17 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில், 1,600 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு முதல் பரிசாக 3,000 ரூபாய், இரண்டாம் பரிசாக 2,000, மூன்றாம் பரிசாக 1,000 ரூபாய். குழு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 54 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 36 ஆயிரம், மூன்றாம் பரிசாக 18 ஆயிரம் ரூபாய் என 41.58 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தவர்கள், மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். தமிழகத்தில் முதல் முறையாக முதல்வர் முயற்சியால் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தற்போது, உலக அளவிலான ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இவ்வாறு உலக அளவிலான போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றால் தான், இளைஞர்களிடையே விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். மாணவர்கள் கல்வியோடு விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்களும், ஊக்கமளித்திட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.
