UPDATED : டிச 31, 2009 12:00 AM
ADDED : டிச 31, 2009 06:03 PM
கோவை: தமிழகத்தில் புதிதாக ஒருமை பல்கலைகள் ஏற்படுத்தும் அரசின் முயற்சியை, தனியார் கல்லூரி நிர்வாக சங்கம் வரவேற்றுள்ளது.
இதற்கான சட்ட வரைவு ஏற்படுத்தும் போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என, சங்கத்தின் தலைவர் ஆறுச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் தகுதி வாய்ந்த சில கல்லூரிகளை ஒருமை பல்கலைகளாக உயர்த்துவது தொடர்பாக, தமிழக அரசு முற்போக்கான கருத்தை முன் வைத்துள்ளது. தேசிய அறிவுக்குழு மற்றும் பேராசிரியர் யஷ்பால் குழுவின் பரிந்துரைகளின்படி துவங்கப்பட்டுள்ள இந்த செயல்பாட்டை நடைமுறைப்படுத்தும்போது, தற்போதுள்ள சுமார் 400 பல்கலைகள், 1,500 பல்கலைகள் ஆக மாறும் வாய்ப்பு உள்ளது.
இந்த திட்டத்தை சில ஆசிரியர் சங்கங்கள் எதிர்த்து வருகின்றன. இதை பரிசீலிக்க, தமிழக அரசு நிபுணர் குழு அமைத்துள்ளது. ஆய்வுக்குப் பின் இந்த வல்லுனர் குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கத் தயாராக உள்ள நிலையில், சில ஆசிரியர் சங்கங்கள் இதை எதிர்ப்பது, திட்டத்துக்கு தடையாக உள்ளது. இதனால் கல்லூரி வளாகங்களில் அமைதியும் ஒழுக்கமும் சீர்குலையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவம் தேவை: தமிழக உயர்கல்வித் திட்டத்தில் கொண்டு வரப்படும் இந்த முற்போக்குத் திட்டத்தை தனியார் கல்லூரி நிர்வாகங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றன. தமிழக அரசு இதனை நிறைவேற்றி சட்டவரைவு ஏற்படுத்தும்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பளம், ஓய்வுக் கால சலுகைகள் ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தனியார் கல்லூரி நிர்வாகிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில், மேலாண்மைக் குழுவிலும் ஆட்சிக் குழுவிலும் போதுமான பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தேவையற்ற வதந்திகளை தடுக்கவும் அரசின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படாமல் இருக்கவும், தமிழக உயர்கல்வி அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு, ஆறுச்சாமி கூறியுள்ளார்.
