நீட் தேர்வு எழுதுவோர், தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை உயர்வு
நீட் தேர்வு எழுதுவோர், தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை உயர்வு
UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM
ADDED : ஜூன் 20, 2023 02:11 PM
நாடு முழுதும் அனைத்து மாநில பாடத்திட்டங்களிலும் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். சித்தா ஆயுர்வேதம் யுனானி உள்ளிட்ட படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றன. ஆனால் அதற்கு மாற்றாக தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையும் தேர்ச்சி விகிதமும் அதிகரித்த வண்ணம் உள்ளன.இதில் முத்தாய்ப்பாக இந்த ஆண்டு நீட் தேர்வில் தேசிய அளவில் முதல் இடம் பெற்ற மாணவரே தமிழகத்தை சேர்ந்தவராவார். மேலும் தேசிய அளவில் டாப் 10 பேரில் தமிழகத்தை சேர்ந்த நான்கு பேர் இடம் பெற்றுள்ளனர். தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் நீட் இலவச பயிற்சியை பெறும் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சியும் அதிகரிக்கிறது.* நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை தேசிய அளவில் 2019ல் 14.10 லட்சத்தில் இருந்து இந்த ஆண்டில் 20.38 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது ஐந்து ஆண்டுகளில் 6.28 லட்சம் பேர் கூடுதலாக தேர்வு எழுதியுள்ளனர்.* தேசிய தேர்ச்சி 2019ல் 7.97 லட்சம் பேர் என்று இருந்த நிலையில் இந்த ஆண்டில் 11.46 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் 3.49 லட்சம் பேர் அதிகரித்துள்ளது.* தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் 2019ல் 1.23 லட்சம் பேர் பங்கேற்றனர். ஐந்து ஆண்டுகளில் 2023ல் 1.45 லட்சமாக உயர்ந்துள்ளது. 2019ல் 49 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது 2023ல் 54 சதவீதமாக உள்ளது.* அரசு பள்ளி மாணவர்களில் 2019ல் 8550 பேர் நீட் தேர்வு எழுதினர். 13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தற்போது ஐந்து ஆண்டுகளில் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 12997 ஆக உயர்ந்துள்ளது. தேர்ச்சி சதவீதம் 13ல் இருந்து 31 ஆக அதிகரித்துள்ளது.
