UPDATED : ஜூன் 25, 2023 12:00 AM
ADDED : ஜூன் 25, 2023 03:27 AM
மெரினா:
மயிலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் விவேகானந்தர் இல்லம் எதிரில் மெரினா கடற்கரை மணற்பரப்பில்,போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.அங்கு அமைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மணற்சிற்பத்தை தலைமையிடத்து கூடுதல் கமிஷனர் லோகநாதன் திறந்து வைத்தார். இணை கமிஷனர் ரம்யபாரதி, திஷா மிட்டல், துணை கமிஷனர் ரஜத் சதுர்வேதி மற்றும் போலீசார் பங்கேற்றனர். போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், நடிகர் கார்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கானா பாலா, டிவி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் உள்ளிட்டோர் பேசினர். போதை ஒழிப்பு சம்பந்தமாக, அங்கிருந்த வெள்ளை நிற பதாகையில், அனைவரும் கையெழுத்திட்டனர். ராணிமேரி கல்லுாரி மாணவியர், போதை ஒழிப்பு குறித்து கலை நிகழ்ச்சி நடத்தினர்.புளியந்தோப்பு காவல் மாவட்டம் சார்பில், பட்டாளத்தில் நடந்த நிகழ்ச்சியில், போதைப் பொருட்களுக்கு எதிரான கானா பாடலை, அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யபாரதி பெற்றார். போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் சமூகத்தில் ஏற்படும் அவமானங்கள் குறித்தும், இந்த பாடல் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
