UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM
ADDED : ஜூன் 27, 2023 09:48 AM
சென்னை:
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள தன்னாட்சியற்ற இன்ஜி., கல்லுாரிகளின் செமஸ்டர் தேர்வில், ஒரு கல்லுாரியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்; நான்கு கல்லுாரிகளில் தேர்வு எழுதிய அனைவரும் ஃபெயிலாகி உள்ளனர்.அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள தன்னாட்சியற்ற 392 கல்லுாரிகளுக்கான ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்ச்சி சதவீத பட்டியலை, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டு உள்ளது. இதன்படி ராணிப்பேட்டையில் உள்ள சப்தகிரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி மட்டும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 12 கல்லுாரிகள் 80 சதவீதத்துக்கு அதிகமாகவும்; 116 கல்லுாரிகள் 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலும் தேர்ச்சி பெற்று உள்ளன.மேலும் 149 கல்லுாரிகள் 30 முதல் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 84 கல்லுாரிகள் 10 முதல் 30 சதவீதம் தேர்ச்சி பெற்றுஉள்ளன. 22 கல்லுாரிகள் 5 முதல் 10 சதவீதம் வரையிலும்; இரண்டு கல்லுாரிகள் 4 சதவீதமும், 1 கல்லுாரி ஒரு சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. நான்கு கல்லுாரிகளில் தேர்வு எழுதிய ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.கல்லுாரிகளின் தேர்ச்சி சதவீதம், மாணவர் எண்ணிக்கை மற்றும் செயல்திறனை பார்த்து, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்களுக்கான கல்லுாரிகளை தேர்வு செய்ய வசதியாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. எந்தெந்த கல்லுாரிகளின் தேர்ச்சி விகிதம் எப்படி என்ற முழு விபரங்களை, www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
