UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM
ADDED : ஜூன் 27, 2023 03:54 PM
கோவை:
கோவையில் நடந்த நான் முதல்வன் திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்ற மாணவர்களில் 66 பேர் ஐ.டி.ஐ., படிப்பில் சேருவதற்கு சம்மதித்துள்ளனர்.கடந்த 2022- 23ம் கல்வியாண்டில் மேல்நிலை படிப்பில் தேர்ச்சி பெற்று, கல்லுாரிகளில் சேர்க்கை பெறாத மாணவர்களுக்கான சிறப்பு முகாம், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடத்தப்பட்ட இந்த முகாமில், அரசு ஐ.டி.ஐ.,க்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஐ.டி.ஐ., படிப்பதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் பற்றி கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.இந்த முகாமில் மொத்தம் 158 மாணவ, மாணவியர் பதிவு செய்திருந்தனர். முகாம் நிறைவாக பழங்குடியினருக்கான ஆனைகட்டி ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை பெறுவதற்கு 5 மாணவர்கள் ஒப்புக்கொண்டனர். மேட்டுப்பாளையம் ரோடு அரசு ஐ.டி.ஐ., யில் சேருவதற்கு 61 மாணவ, மாணவியரும் அவர்களது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இந்த 66 பேரின் சேர்க்கையும் உறுதி செய்யப்பட்டது.இது மட்டுமின்றி, அரசு கலைக்கல்லுாரிகள், அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகளில் சேர விருப்பம் தெரிவித்த மாணவ, மாணவியருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, அரசு கலைக்கல்லுாரியில் சேர 8 மாணவர்களும், அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் சேர 8 மாணவர்களும், தனியார் கல்லுாரிகளில் சேர 7 மாணவர்களும் முன் வந்தனர். இதன் மூலம் சிறப்பு முகாம் நடத்தியதன் நோக்கம் நிறைவேறியுள்ளதாக அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
