UPDATED : ஜூன் 28, 2023 12:00 AM
ADDED : ஜூன் 28, 2023 04:08 AM
கல்லுாரிகள் ஒரு வகையில் இருந்து மற்றொரு வகைக்கு மாறிக் கொள்ள மத்திய அரசு புதிய கல்வி கொள்கை வழிவகுக்கிறது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் கல்லுாரிகள் வகை மாற்றிக் கொள்ள அனுமதி அளிக்கும்படி மாநில அரசுகளுக்க அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் கல்லுாரிகளின் வகை மாற்றம் தமிழகத்தில் முதல் முதலாக அமலுக்கு வருகிறது. இதன்படி தமிழகத்தில் ஒரு பாலிடெக்னிக் கல்லுாரி இன்ஜினியரிங் கல்லுாரியாகவும்; ஒரு கலை அறிவியல் கல்லுாரி இன்ஜினியரிங் கல்லுாரியாகவும் வகை மாற்றம் பெற உள்ளன. இரண்டு இன்ஜினியரிங் கல்லுாரிகள் பாராமெடிக்கல் என்ற மருத்துவம் சார் படிப்பு நடத்தும் கல்லுாரிகளாக மாற உள்ளன. இதற்கான முன் அனுமதியை தமிழக அரசிடம் பெற்றுள்ளன.இந்த கல்லுாரிகள் ஏற்கனவே இணைப்பில் உள்ள பல்கலைகளில் தடையில்லா சான்று பெற்று, புதிய படிப்பு வகைக்கான பல்கலையிடம் வழங்கியுள்ளன. ஏற்கனவே மாணவர் சேர்க்கை குறைந்து பாதிக்கப்பட்டுள்ள பல இன்ஜினியரிங் கல்லுாரிகள் தங்கள் கல்லுாரி வளாகத்தை வேறு உயர்கல்வி படிப்பு வகைக்கு மாற்ற இந்த புதிய முறை உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
