UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM
ADDED : ஜூன் 30, 2023 03:40 AM
புதுடில்லி:
நடப்பாண்டு நடைபெற்ற, யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வை ரத்து செய்யக்கோரி, டில்லி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கடந்த மே மாதம் 28ம் தேதி நடைபெற்ற யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் 12ம் தேதி வெளியாகின. இதை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் 17 தேர்வர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நடந்து முடிந்த தேர்வில், தேர்வாணையத்தின் தன்னிச்சையான முடிவுகளால், மனுதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு அவர்கள், எழுதிய தேர்வின் விடை குறிப்புகள் வழங்கப்படவில்லை. மேலும், தேர்வாணையம் விண்ணப்பதாரர்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை வழங்காதது உள்ளிட்டவை, தேர்வர்களின் விடையளிக்கும் திறனை சோதிப்பது போல் உள்ளது.இதனால், தேர்வு குறித்த, அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ன. எனவே, ஜூன்.,12ம் தேதி வெளியான, முதல்நிலை தேர்வு முடிவுகள் ரத்து செய்வதுடன், பொது வினாத்தாள் 1 மற்றும் 2 ஆகிய தேர்வுகளை, மீண்டும் நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.யுபிஎஸ்சி தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் நரேஷ் கவுசிக், மனு மீது ஆட்சேபனை தெரிவித்ததுடன், இதை, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தான், விசாரிக்க வேண்டும், என்றார். இதையடுத்து, நீதிபதி ஜூலை.,3ம் தேதி மனுவை பட்டியலிட உத்தரவிட்டுள்ளார்.
