UPDATED : ஜூன் 30, 2023 12:00 AM
ADDED : ஜூன் 30, 2023 04:13 AM
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அருகில், அமெட் அறிவுப் பூங்கா மற்றும் மெர்ஸ்க் தனிச்சிறப்பு மையத்தை சென்னை அமெட் பல்கலைக்கழகம் துவக்கியுள்ளது.சென்னை கானத்துார் பகுதியில், அமெட் எனப்படும் கடல்சார் கல்வி மற்றும் பயிற்சி அகாடமி, 1993ல் துவக்கப்பட்டது. 2007ல் பல்கலைக்கழகமாக தரம் உயர்ந்து, இந்திய முதல் கடல்சார் பல்கலைக்கழகமாக சிறப்பு பெற்றது. கல்பாக்கம் அடுத்த, தென்பட்டினம் பகுதியில், அமெட் அறிவுப் பூங்கா மற்றும் மெர்ஸ்க் தனிச்சிறப்பு மையம் ஆகியவற்றை 150 ஏக்கர் வளாகத்தில் தற்போது அமைத்துள்ளது. இதன் துவக்கவிழா நேற்று நடந்தது. அமெட் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் ராமச்சந்திரன் தலைமையில், நிர்வாக அறங்காவலர் சுசீலா ராமச்சந்திரன், அறிவுப் பூங்கவை துவக்கினார். மெர்க்ஸ் தனிச்சிறப்பு மையத்தை, ஏ.பி. மொல்லர் - மெர்க்ஸ் நிறுவன கடல்சார் மக்கள் மற்றும் கலாசார துணைத்தலைவர் நீல்ஸ் எச் புரூஸ் திறந்து வைத்தார்.மேலும், விடுதி வளாகத்தை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இந்துபாலா, உணவக வளாகத்தை, ஆசிய கடல்சார் மக்கள் தலைமை இயக்குனர் கரண் கோச்சார் திறந்து வைத்தனர். கடல்சார் படிப்புகள் படிப்போர் பயிற்சித் திறன்களை மேம்படுத்த, பணி வாய்ப்புகள் பெற, தனிச்சிறப்பு மையமாக உருவாக்கப்பட்டது குறித்து ராமச்சந்திரன் மற்றும் நீல்ஸ் புரூஸ் ஆகியோர் விளக்கினர். இணைவேந்தர் ராஜேஷ் ராமச்சந்திரன் வரவேற்றார். தனிச்சிறப்பு மைய கலாசார, திறன் மேலாளர் அரவிந்த் சங்கர் நன்றி தெரிவித்தார்.
