UPDATED : ஜூலை 04, 2023 12:00 AM
ADDED : ஜூலை 04, 2023 09:43 AM
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், பஸ் வசதியின்றி 4 கி.மீ., நடந்து சிரமப்படுவதாக மாணவர்களும், குடிநீர் வரவில்லை, டாஸ்மாக் கடையை பூட்ட வேண்டும் என கிராம மக்கள் மனு அளித்தனர்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். பரமக்குடி எமனேஸ்வரம் கனகராஜ் வன்கொடுமையால் இறந்தார். இவரது மனைவி விசித்ராவுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டாவை கலெக்டர் வழங்கினார்.பஸ் வசதியின்றி மாணவர்கள் அவதி
உத்தரகோச மங்கை அரசு மே.நி., பள்ளியில் படிக்கும் வெள்ளா மருச்சுகட்டி கிராம மாணவர்கள் பெற்றோருடன் மனு அளித்தனர். பள்ளி நேரத்தில் பஸ் வசதியின்றி 4 கி.மீ., நடந்து சிரமப்படுகிறோம். காலை 8:00 மணி, மாலை 5:00மணிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும். மேலும் குடிநீர், ரோடு வசதி செய்துதர வேண்டும், என வலியுறுத்தினர்.குடிநீர் வராமல் அவதி
ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி கூட்டாம்புளி, சாத்தமங்கலம் கிராம மக்கள் காவிரி குடிநீர் வரவில்லை. சுகாதாரமற்ற குளத்து நீரை பயன்படுத்துகிறோம். சுகாதாரமான குடிநீர் குடம் ரூ.15க்கு விற்கின்றனர். உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். புதிதாக ரேஷன் கடை கட்டித்தர வேண்டும், என வலியுறுத்தினர்.டாஸ்மாக் கடையை பூட்டுங்க
ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் நகர் வீட்டு உரிமையாளர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர். இதில், 50 குடும்பங்கள் வசிக்கும் பகுதி அருகே 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதனால் மாணவர்கள், பெண்கள் ரோட்டில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இக்கடையை பூட்ட பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. மாறாக சம்பந்தமே இல்லாமல் வேறு பகுதியில் கடையை பூட்டியுள்ளனர். எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள கடை எண் 6969 பூட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும், என வலியுறுத்தினர். இதே குறைதீர் கூட்டத்தில் பட்டா மாற்றம், வாய்க்கால் ஆக்கிரமிப்பு என 267 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் மாரிசெல்வி, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
