UPDATED : ஜூலை 04, 2023 12:00 AM
ADDED : ஜூலை 04, 2023 09:45 AM
விருதுநகர்:
விருதுநகரில் 30 விளையாட்டு ஆசிரியர் காலியிடங்களை நிரப்பாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மாவட்டத்தில் 99 மேல்நிலைப் பள்ளிகள், 91 உயர்நிலைப் பள்ளிகள் என 190 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் 90 விளையாட்டு ஆசிரியர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 30 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் குறைந்து கற்றலின் முன்னேற்றம் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் சங்க செயலாளர் பிச்சை கூறியதாவது:
தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதே நிலை நீடிக்கிறது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த வரை கல்வி, விளையாட்டில் முதன்மை நிலையில் இருந்தாலும் விளையாட்டு ஆசிரியர்களின் பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே விரைந்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்றார்.
