UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM
ADDED : ஜூலை 06, 2023 09:45 AM
பெங்களூரு:
பள்ளி சிறார்களுக்கு, மாதத்தில் ஒரு நாள், புத்தக மூட்டையை சுமப்பதில் இருந்து விடுதலை அளிக்கும் நோக்கில், மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமையன்று, பேக் இல்லாத நாள் நிகழ்ச்சி நடத்தும்படி, கல்வித்துறை உத்தரவிட்டது.சமீபத்தில் பள்ளி புத்தக பையின், எடையை குறைத்து கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. தற்போது மற்றொரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மாதத்தில் ஒரு நாளாவது, புத்தக சுமை இல்லாமல், சிறார்களுக்கு மகிழ்ச்சியான கல்வியை அளிக்கும் நோக்கில், மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமையன்று, பேக் இல்லாத தினம் அல்லது மகிழ்ச்சியான சனிக்கிழமை நிகழ்ச்சி நடத்தும்படி, கல்வித்துறை நேற்று உத்தரவிட்டது.அன்றைய தினம், திடக்கழிவு நிர்வகிப்பு, பாதுகாப்பாக தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, அடிப்படை வசதிகள், சாலை பாதுகாப்பு, துாய்மை, ஆரோக்கியமான வாழ்க்கை, போதைப் பொருட்களால் ஏற்படும் பின்விளைவுகள் என பயனுள்ள விஷயங்களை பற்றி, சிறார்களுக்கு கற்றுத்தர வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017லேயே, புத்தக பை இல்லாத தினம் கொண்டாட கல்வித்துறை திட்டமிட்டது. 2019ல் திட்டத்தை செயல்படுத்த உத்தரவும் பிறப்பித்தது. ஆனால் கொரோனா உட்பட பல்வேறு காரணங்களால் திட்டத்தை செயல்படுத்தவில்லை. தற்போதைய புதிய அரசு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
