UPDATED : ஜூலை 09, 2023 12:00 AM
ADDED : ஜூலை 09, 2023 07:50 AM
மறைமலை நகர்:
மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின், 19வது பட்டமளிப்பு விழா, எஸ்.ஆர்.எம்., கல்லுாரி வளாகத்தில் உள்ள, டி.பி.கணேசன் கலையரங்கத்தில் நேற்று நடந்தது.இதில், சிறப்பு விருந்தினராக மத்திய ரயில்வே, தொலைதொடர்பு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு, எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப நிறுவன இணை வேந்தர்கள் ரவி பச்சமுத்து, சத்ய நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைவேந்தர் முத்தமிழ்ச் செல்வன் ஆண்டறிக்கை வாசித்தார். எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப நிறுவன வேந்தரும், பெரம்பலுார் எம்.பி.,யுமான பாரிவேந்தர், தலைமை உரை ஆற்றினார்.பாரிவேந்தர் பேசியதாவது:
எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள் வருகை தந்து, மாணவர்களிடையே உரையாற்றி சென்றுள்ளனர். நம் பிரதமர், ஒவ்வொரு பகுதிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், திறமையின் அடிப்படையில் அமைச்சர்களை நியமித்துள்ளார். நடப்பாண்டு, ஜி - 20 மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்துகிறது. இது நம் நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்.எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள், உலகின் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். கடந்தாண்டு, இங்கு பயின்ற 12,000 மாணவர்கள், பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் பெறுகின்றனர். சிறப்பு விருந்தினராக வந்துள்ள ரயில்வே அமைச்சர், நான் எம்.பி.,யாக உள்ள பெரம்பலுார் தொகுதிக்கு ரயில்வே திட்டங்களை கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:
நான் மூன்று கல்லுாரிகளில் படித்துள்ளேன். அங்கு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கவில்லை. முதன்முதலாக, இங்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, தொலைதொடர்பு உள்ளிட்ட துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. அதே போல தொலைதொடர்பு துறையும் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. 5ஜி சேவை கொண்டு வரப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப நிறுவன பதிவாளர் பொன்னுசாமி, மருத்துவம் மற்றும் உடல் ஆரோக்கியம் துறை இணை, துணைவேந்தர் லெப்டினன்ட் கர்னல் டாக்டர் ரவிகுமார், தேர்வு கட்டுப்பாட்டாளர் குணசேகரன், டீன்கள் குணசேகரன், கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
