UPDATED : ஜூலை 11, 2023 12:00 AM
ADDED : ஜூலை 11, 2023 04:09 PM
ஹலசூரு:
பெங்களூரு தமிழ் இலக்கியப் பேரவை சார்பில், வரும் 15ம் தேதி ஹலசூரு ஒடுக்கத்துார் மடத்தில், பேராசிரியர் நல்லசிவம் பங்கேற்கும் தமிழ் இசைப் பேருரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முழு நிகழ்ச்சிக்கும் சிறுமியரே தொகுப்பாளர்களாக செயல்படுகின்றனர்.தமிழகம், திருநெல்வேலி மாவட்டம், கடையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். சிறு வயதில் இருந்தே தமிழ் மீது பற்று கொண்ட இவர், தற்போது பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில், மென்பொறியாளராக பணியாற்றுகிறார். எச்.ஏ.எல்., அருகில் லால்பகதுார் சாஸ்திரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். இதே குடியிருப்பில் மேலும் சில தமிழ் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், &'பெங்களூரு தமிழ் இலக்கியப் பேரவை&' என்ற அமைப்பை ஆரம்பித்தார். ஆண்டுதோறும், பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த வகையில், ஹலசூரு ஏரிக்கரையில் அமைந்துள்ள ஒடுக்கத்துார் மடத்தில், வரும் 15ம் தேதி மாலை 5:30 மணிக்கு தமிழ் இசைப் பேருரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, ஆறுமுகம் கூறியதாவது:
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை பேராசிரியர் கோ.ப.நல்லசிவம், இசை வழிபாடும், இனிய வாழ்வும் என்ற தலைப்பில் தமிழ் இசைப் பேருரை நிகழ்த்த உள்ளார். சேத்தன் குழுவினரின் வயலின் வித்வான் ஜி.என்.சாமசுந்தர், மிருதங்க வித்வான் கே.வி.சிவலிங்கய்யா ஆகியோர் பக்க வாத்தியம் வாசிக்க உள்ளனர். மேலும், சிவதீட்சை அனுஷ்டான விதி குறித்த புத்தகம் வெளியிடப்படுகிறது. மொத்த நிகழ்ச்சிக்கும் சிறுமியரே தொகுப்பாளராக செயல்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.கூடுதல் தகவலுக்கு 99725 35455 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
