திருப்பூரில் ஜார்கண்ட் மாநில தொழிலாளர் சந்திப்பு நிகழ்ச்சி
திருப்பூரில் ஜார்கண்ட் மாநில தொழிலாளர் சந்திப்பு நிகழ்ச்சி
UPDATED : ஜூலை 11, 2023 12:00 AM
ADDED : ஜூலை 11, 2023 04:36 PM
திருப்பூர்:
மத்திய அரசின் தீன தயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி பெற்ற வெளிமாநில தொழிலாளர்கள், திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் உட்பட பல்வேறு ஆலைகளில், பணி அமர்த்தப்பட்டு வருகின்றனர்.அந்தவகையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டத்தில் பயிற்சி முடித்து, திறன் மிக்க தொழிலாளராக திருப்பூர் நிறுவனங்களில் பணிபுரிந்துவருகின்றனர். ஜார்கண்ட் மாநில வாழ்வாதார மேம்பாட்டு மையம் சார்பில், திருப்பூரில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநில தொழிலாளர் சந்திப்பு நிகழ்ச்சி, தெக்கலுாரில் உள்ள கே.பி.ஆர்., மில் நிறுவனத்தில் நடைபெற்றது.கே.பி.ஆர்., மில்ஸ், காட்டன் பிளாசம், ஆம்ஸ்ட்ராங், நிவேதா கார்மென்ட்ஸ், மானிங்க், சி.ஆர்., கார்மென்ட்ஸ், பெஸ்ட், ஜெ.ஜெ., மில்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் ஜார்கண்ட் தொழிலாளர் 1,500 பேர் பங்கேற்றனர். ஜார்கண்ட் மாநில வாழ்வாதார மேம்பாட்டு மைய முதன்மை செயல் அதிகாரி சுரஜ்குமார், ஹசனைன் அன்சாரி, கே.பி.ஆர்., மில்ஸ் மனிதவள மேம்பாட்டு அதிகாரி தங்கவேல், குவாண்டம் நிட் மனிதவள மேம்பாட்டு அதிகாரிவீரகுமார் உட்பட நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.ஜார்கண்ட் தொழிலாளர்கள், திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிவது குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். தொழிலாளர்களுக்கு ஜார்கண்ட் பாரம்பரிய நடனம், விளையாட்டு போட்டிகள், பேஷன் ஷோ நடத்தப்பட்டது.
