5 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை மத்திய அரசே நியமிக்கும்
5 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை மத்திய அரசே நியமிக்கும்
UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM
ADDED : ஜூலை 12, 2023 10:20 AM
மஹாராஷ்டிராவின் மும்பையில், டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சஸ்; உ.பி.,யின் ஆக்ராவில், தயால்பாக் கல்வி நிறுவனம்; குஜராத்தின் ஆமதாபாதில், குஜராத் வித்யாபித், தமிழகத்தின் கோவையில், அவினாசிலிங்கம் பெண்கள் பல்கலைக்கழகம்; உத்தரகண்டின் ஹரித்துவாரில், குருகுல காங்க்ரி ஆகிய தனியார் நிகர்நிலை பல்கலைகளில், அவற்றுக்கு நிதியுதவி அளித்த அறக்கட்டளைகள், துணைவேந்தர்களை நியமித்து வந்தன.இந்நிலையில், இந்த ஐந்து தனியார் நிகர்நிலை பல்கலைகளில், இனி துணைவேந்தர்களை மத்திய அரசே நியமிக்க உள்ளது. இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டி.ஐ.எஸ்.எஸ்., உட்பட ஐந்து தனியார் நிகர்நிலை பல்கலைகளுக்கு, இனி, மத்திய அரசே துணைவேந்தர்களை நியமிக்கும். அதற்காக, யு.ஜி.சி., விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் ஆண்டு வருமானத்தை விட, 50 சதவீதம் கூடுதல் நிதியை அரசிடம் இருந்து பெறும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், இனி மத்திய அரசால் நியமிக்கப்படுவர்.இதற்காக, மூன்று பேர் அடங்கிய தேடல் மற்றும் தேர்வுக் குழு அமைக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழுவின் ஒப்புதலைப் பெற்ற பின், தேடல் மற்றும் தேர்வுக் குழு அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
