UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM
ADDED : ஜூலை 15, 2023 10:34 AM
சென்னை:
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு விதிகளில் ஏற்பட்டு உள்ள முரண்பாடு களை நீக்கக் கோரி, ஆக.,14ல் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தப்படும் என, தலைமை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின், மாநில தலைவர் தங்கமணி, பொதுச் செயலர் எழிலரசன், சட்ட செயலர் சீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த, 1978ல் மேல்நிலை கல்வி துவங்கப்பட்டது. அப்போது முதல், 45 ஆண்டுகளாக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கு அடுத்த பதவி உயர்வு இல்லாத நிலை உள்ளது. ஊதிய நிலை, 18ல் உள்ள உயர்நிலை தலைமை ஆசிரியர்களையும், 23ல் உள்ள மேல்நிலை தலைமை ஆசிரியர்களையும் சமப்படுத்தி, மாவட்ட கல்வி அதிகாரி பணி வழங்குவது முறையானதல்ல. தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான விதிகளை உரிய பணி அனுபவம், பதவி நிலைக்கு ஏற்ப மாற்றம் செய்யவும், முரண்பாடுகளை களையவும், தமிழக பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி, ஆக.,14ல் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தப்படும். அதன் பிறகும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இரண்டு வாரங்களுக்கு முன், மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கான பொறுப்பு பதவி வழங்கப்பட்டதிலும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முன்னுரிமை வழங்கியதாக, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
