UPDATED : ஜூலை 16, 2023 12:00 AM
ADDED : ஜூலை 16, 2023 10:07 AM
சென்னை:
சட்டக் கல்லுாரிகள் துவங்க, தனியாருக்கு தடை கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான ஹரிசங்கர் என்பவர், தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு சட்டக் கல்லுாரி இருக்க வேண்டும். சட்டக் கல்வியில் தனியாருக்கு அனுமதி அளித்ததால், காளான் போல் சட்டக் கல்லுாரிகள் முளைக்கின்றன.கடந்த, 2014ல் தனியார் சட்டக் கல்லுாரி தடை சட்டம் வந்தது. இதை ரத்து செய்து, 2016ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில், 15 அரசு சட்டக் கல்லுாரிகளும், 9 தனியார் சட்டக் கல்லுாரிகளும், 14 நிகர்நிலை பல்கலையும் உள்ளன. கடந்த, 2018ல் தனியார் சட்டக் கல்லுாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தை, அரசு இயற்றியது. இந்தச் சட்டத்தின்படி, ஒரு மாவட்டத்தில் ஏற்கனவே அரசு சட்டக் கல்லுாரி இருந்தால், அந்த மாவட்டத்தில் சட்டக் கல்லுாரி துவங்க, யாருக்கும் அனுமதி அளிக்கக் கூடாது.ஆனால், அரசு சட்டக் கல்லுாரி இல்லாத மாவட்டங்களில், தனியார் விண்ணப்பிக்கலாம். தற்போது, 11 தனியார் சட்டக் கல்லுாரிகள் துவங்க, அரசுக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தனியார் கல்லுாரிகள், இடஒதுக்கீடு முறையை பின்பற்றுவது இல்லை. ஏழை எளிய மாணவர்கள், குறைந்த செலவில் சட்டக் கல்வியை பெற முடியாது. சட்டக் கல்லுாரிகள் துவங்க, தனியாருக்கு அனுமதி வழங்கக் கூடாது என, அரசுக்கு மனு அனுப்பினேன். இருந்தும், தனியார் விண்ணப்பங்களை, அரசு பரிசீலித்து வருகிறது. எனவே, விடுபட்ட மாவட்டங்களில் சட்டக் கல்லுாரிகளை துவங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். தனியாருக்கு அனுமதி வழங்க, அரசுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசு, பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டு, விசாரணை, செப்டம்பர் 5க்கு தள்ளி வைக்கப்பட்டது.
