UPDATED : ஜூலை 18, 2023 12:00 AM
ADDED : ஜூலை 18, 2023 10:24 AM
கிருஷ்ணகிரி:
இந்திய ரிசர்வ் வங்கி சார்பில், அகில இந்திய நிதி எழுத்தறிவு வினாடி-வினா போட்டிகளை, அரசு பள்ளிகளில், 8ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு நடத்தி வருகிறது. வட்டார அளவில் வெற்றி பெற்ற, 20 மாணவ, மாணவியருக்கு நேற்று கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், இந்திய ரிசர்வ் வங்கியின் மாவட்ட முன்னோடி அதிகாரி கிருஷ்ணகுமார் மேற்பார்வையில், மாவட்ட அளவிலான வினாடி-வினா போட்டி நடந்தது. முதல் சுற்றில், 2 பேர் வீதம், 10 குழுக்களுக்கு எழுத்து போட்டி நடந்தது. இதில் தேர்வான, 6 குழுக்களுக்கு வினாடி-வினா குவிஸ் போட்டி நடத்தப்பட்டது. இதை மாஸ்டர் அனிஸ் தீபக் நடத்தினார். இதில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசு, 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு, 7,500 ரூபாய், மூன்றாம் பரிசு, 5,000 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதில் தேர்வான முதல் அணி வரும், 27ல் சென்னையில் நடக்கும் மாநில அளவிலான வினாடி-வினா போட்டிகளில் கலந்து கொள்கிறது. மாநில அளவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு, 20 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு, 15 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
