UPDATED : ஜூலை 18, 2023 12:00 AM
ADDED : ஜூலை 18, 2023 10:33 AM
ஊட்டி:
ஊட்டியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., தேசிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது என, பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ்., தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில், ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன் பாகவத் உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்காக ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.இது குறித்து, சில பெற்றோர் கல்வி அலுவலகத்திற்கு புகார் அளித்தனர். தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி கூறுகையில், பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஜெ.எஸ்.எஸ். பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன், என்றார்.பள்ளி முதல்வர் நந்தகுமார் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க, மேலிடத்தில் இருந்து ஏற்கனவே உத்தரவு வந்தது. கூட்ட நாட்களை கணக்கில் கொண்டு, முன்னதாக பள்ளி திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது, என்றார்.
