இடைநின்ற 966 மாணவர்களை தொழில் கல்வியில் சேர்க்க இலக்கு
இடைநின்ற 966 மாணவர்களை தொழில் கல்வியில் சேர்க்க இலக்கு
UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM
ADDED : ஜூலை 19, 2023 09:17 AM
தேனி:
அரசுப் பள்ளிகளில் 8 ம் வகுப்பிற்கு மேல் பயின்று இடைநின்ற 966 மாணவர்களை தொழில் கல்வியில் சேர்க்க அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடக்கிறது.தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் நடந்த 10, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் பல மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. சிலர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்விற்கும் ஆர்வம் காட்டவில்லை. இம்மாணவர்களை அரசு ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேர்க்க அரசு ஏற்பாடு செய்து வந்தது. அதன்படி அரசு பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டனர்.மாணவர்களை தொழில் கல்வியில் சேர்ப்பதற்கான சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் இன்று (ஜூலை 19) நடக்கிறது. கூட்டத்திற்கு மாணவர்கள் பெற்றோருடன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலாண்மை குழு உறுப்பினர்கள் மூலம் பள்ளிக்கு அருகே உள்ள 18 வயதிற்கு குறைவான இடைநின்ற மாணவர்களும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.கூட்டத்தில் தொழில் கல்வியில் உள்ள பிரிவுகள், வேலை வாய்ப்புகள் பற்றி எடுத்துரைக்கப்பட உள்ளது.மாவட்டத்தில் அரசு உயர்நிலை 36 , மேல்நிலைப்பள்ளிகள் 70ல் 10ம் வகுப்பில் இடைநின்ற 216, பிளஸ்2 படித்து இடைநின்ற 750 மாணவர்கள் என மொத்தம் 966 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் தொழில் கல்வியில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
