UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM
ADDED : ஜூலை 24, 2023 09:36 AM
லக்னோ:
உத்தரபிரதேசத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள, 19வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளிகளில், இன்சுலின் பேனா மற்றும் குளுக்கோமீட்டர்கள் எடுத்துச் செல்ல, அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின், 2021 தரவுகளின்படி, டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ள நாடுகளில் இந்தியா உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இந்த வகையால், நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், நாளொன்றுக்கு முன்று முதல் ஐந்து முறை, இன்சுலின் ஊசி போடுவதும், சர்க்கரை அளவு பரிசோதனை செய்வதும் அவசியம். சமீபத்தில், தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம், உ.பி., அரசுக்கு, எழுதிய கடிதத்தில், டைப்-1 நீரிழிவு நோயால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறப்பட்டிருந்தது.இதையடுத்து, அம்மாநில, கல்வித்துறை இயக்குனர், விஜய் கிரண் ஆனந்த் எழுதியுள்ள, கடிதத்தில் கூறியுள்ளதாவது:
குழந்தைகள் தங்களின் நேரத்தில், மூன்றில் ஒரு பகுதியை பள்ளிகளில் செலவிடுவதால் அவர்களின் சிறப்பு கவனிப்பை உறுதி செய்வது பள்ளிகளின் கடமையாகும். இதனால், என்.சி.பி.சி.ஆர்., விதிமுறைகளின்படி, டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட, 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இன்சுலின் ஊசி போடவும், சர்க்கரையை பரிசோதிக்கவும், வகுப்பு மற்றும் தேர்வுகளின்போது பரிந்துரைக்கப்பட்ட நீரிழிவு சிகிச்சை முறைகளை எடுத்துக் கொள்ளவும் அனுமதியளிக்கப்படுகிறது. வகுப்பறைகள் மற்றும் தேர்வு கூடங்களுக்குள் இன்சுலின்பேனா மற்றும் குளுக்கோமீட்டர்களை எடுத்துச் செல்லவும் அனுமதியளிக்கப்படுகிறது. மேலும், மருத்துவ ஆலோசனைகளின்படி, மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கலாம்.அதேபோல், பள்ளி தேர்வு மற்றும் இதர போட்டித் தேர்வுகளில், சர்க்கரை மாத்திரைகள் எடுத்துச் செல்லவும், மருந்து, பழங்கள், குடிநீர், வேர்க்கடலை, பிஸ்கட், உலர் பழங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லவும் அனுமதியளிக்கப்படுகிறது. தேர்வு கூடங்களுக்குள் எடுத்துச் செல்லப்படும், குளுக்கோமீட்டர்கள் மற்றும் இன்சுலின் பேனா போன்றவற்றை, ஆசிரியர்கள் தங்கள் கண்காணிப்பில் வைத்து, குழந்தைகள் தேவைக்கேற்ப பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
