விண்ணப்பிக்க பணம் வசூல் 3 சைபர் சென்டருக்கு பூட்டு
விண்ணப்பிக்க பணம் வசூல் 3 சைபர் சென்டருக்கு பூட்டு
UPDATED : ஜூலை 25, 2023 12:00 AM
ADDED : ஜூலை 25, 2023 09:51 AM
ராய்ச்சூர்:
கிரஹ லட்சுமி திட்டத்துக்கு, சட்டவிரோதமாக மக்களிடம் பணம் பெற்று, விண்ணப்பம் தாக்கல் செய்த, மூன்று சைபர் சென்டர்களில் அதிகாரிகள் குழுவினர் பூட்டு போட்டனர்.கர்நாடக காங்கிரஸ் அரசு அறிவித்த, ஐந்து வாக்குறுதி திட்டங்களில் கிரஹ லட்சுமி, கிரஹ ஜோதி திட்டங்களுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது. திட்டங்களுக்கு விண்ணப்பம் தாக்கல் செய்ய எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது. இதற்கான செலவை அரசே ஏற்றுள்ளது. பயனாளிகள் பணம் எதுவும் செலுத்த தேவையில்லை என மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறியிருந்தார். அதையும் மீறி, பல சைபர் சென்டர்களில், விண்ணப்பம் தாக்கல் செய்ய பணம் வசூலிக்கின்றனர்.ராய்ச்சூர் மான்வியில், மூன்று சைபர் சென்டர்களில் கிரஹ லட்சுமி திட்டத்தில் விண்ணப்பிக்க, ஒவ்வொருவரிடமும் 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மான்வி தாசில்தார் சந்திரகாந்த் தலைமையிலான அதிகாரிகள், நேற்று காலையில் மூன்று சைபர் சென்டர்களில், திடீர் சோதனை நடத்தினர். இதில், மூன்றிலும் பணம் பெற்று விண்ணப்பம் தாக்கல் செய்வது தெரியவந்தது. மூன்று சைபர் சென்டர்களுக்கும், பூட்டு போட்டனர். தனித்தனியாக வழக்கு பதிவாகி உள்ளது.
