மருத்துவ படிப்பு: அரசு மாணவருக்கு ஆங்கில பயிற்சி திட்டம்
மருத்துவ படிப்பு: அரசு மாணவருக்கு ஆங்கில பயிற்சி திட்டம்
UPDATED : ஜூலை 25, 2023 12:00 AM
ADDED : ஜூலை 25, 2023 12:58 PM
சென்னை:
அரசு பள்ளி மாணவர்கள், ஆங்கிலமொழி கல்வி பயில சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில், சிறப்பு வகுப்பில் ஆங்கில மொழி கற்பிக்கத் திட்டம்.தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பில் இடங்கள் கிடைப்பது எட்டா கனியாக இருந்தது. இதனால், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு அமல்படுத்தியது. இதன் பயனாக இந்தாண்டு, 473 எம்.பி.பி.எஸ்., 133 பி.டி.எஸ்., என 606இடங்களில், அரசு பள்ளி மாணவர்கள் சேர உள்ளனர். இவ்வாறு சேரும் மாணவர்கள், ஆங்கிலத்தில் மருத்துவ கல்வியை படிக்க சிரமப்படுகின்றனர். குறிப்பாக மருத்துவம் சார்ந்த ஆங்கில வார்த்தைகள் புரிந்து கொள்ள முடிவதில்லை. இவற்றை தவிர்க்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு பள்ளி மாணவர்கள், ஆங்கிலமொழி கல்வி பயில சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில், சிறப்பு வகுப்பில் ஆங்கில மொழி கற்பிக்க அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், இந்தாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். ஆங்கிலம் எழுதுதல், பேசுதல் மற்றும் மருத்துவ வார்த்தைகளை புரிந்து கொள்ளுதல் போன்றவை கற்றுத்தரப்படும்.கடந்த, 2021ல் இருந்து, 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் மருத்துவ தேர்ச்சி விகிதம்; தற்போதைய கற்கும் ஆற்றல் குறித்து கணக்கெடுப்பு நடக்க உள்ளது. இம்மாணவர்களின் கற்றல் திறன் குறித்து, கல்லுாரிகளிடம் அறிக்கை பெற்று, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
