முதுநிலை மருத்துவ படிப்பு: 47 பேர் சேர்க்கைக்கு தடை
முதுநிலை மருத்துவ படிப்பு: 47 பேர் சேர்க்கைக்கு தடை
UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM
ADDED : ஜூலை 27, 2023 09:38 AM
சென்னை: கடந்தாண்டு முதுநிலை மருத்துவ கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்று சேராத 47 டாக்டர்களுக்கு இந்தாண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க மத்திய சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. அதில், இரண்டு பேர் தமிழக ஒதுக்கீட்டில் விண்ணப்பித்துள்ளனர்.தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாநிலத்தில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. அதேபோல் ஜிப்மர், எய்ம்ஸ், நிகர்நிலை பல்கலைகளில் உள்ள 100 சதவீத இடங்களையும், மத்திய அரசின் மருத்துவ கவுன்சிலிங் குழு நிரப்பி வருகிறது. இதற்கு முன்வரை மூன்று சுற்று மாணவர் சேர்க்கைக்கு பின் காலியாக இருக்கும் இடங்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டது.கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நடைமுறையை மாற்றி, காலி இடங்கள் திருப்பி அளிக்காமல் முழுமையாக மருத்துவ கவுன்சிலிங் குழுவே நிரப்பி வருகிறது. அதன்படி, இறுதி கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்று சேராதவர்களுக்கு நீட் தேர்வு எழுத ஓராண்டு தடை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில்கடந்தாண்டு, 127 மாணவர் கல்லுாரிகளில் இடங்கள் பெற்றும் சேரவில்லை. இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீட்டில், கடந்தாண்டு இடங்கள் பெற்றவர்கள், இந்தாண்டு விண்ணப்பித்துள்ளனரா என, தேசிய தேர்வு வாரியத்திடம் தகவல் கோரப்பட்டது. அதில் நாடு முழுதும், 47 பேர் இருப்பது உறுதியானது. இந்த, 47 பேருக்கும் இந்தாண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக இடங்களுக்கு விண்ணப்பித்த இருவர் குறித்த விபரங்கள், மாநில மருத்துவ கல்வி தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
