அவசர கதியில் பொது பாடத்திட்டம் ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
அவசர கதியில் பொது பாடத்திட்டம் ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM
ADDED : ஜூலை 28, 2023 09:41 AM
திருப்பூர்:
கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவசரகதியில் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்தும் முடிவை திரும்ப பெற வேண்டும்,&' என்று ஹிந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
தி.மு.க., எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தங்கள் சித்தாந்தத்தையும், கொள்கைகையயும் மாணவர்களிடம் திணிக்க முற்படுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த முறை தரமே இல்லாத சமச்சீர் கல்வி முறையை கொண்டு வந்து கல்வியை சீரழித்தது போல, இம்முறை பல்கலையில், ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதே நிலையை உருவாக்க தி.மு.க., நினைக்கிறது.பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோரிடம் எவ்விதமான கருத்தையும் கேட்காமல், ஒரே ஆண்டில், 301 பாடத்திட்டங்களை தயாரித்து, அதை ஆசிரியர்களிடத்தில் கூட கலந்தாலோசிக்காமல் அமல்படுத்த அவசரம் காட்டுவது மாபெரும் தவறு. பாடத்திட்டத்தை போதிக்க சரியான பயிற்சி அளிக்காமலும், புத்தகங்களை வினியோகிக்காமலும், தனியார் நிறுவனங்களின் பாடப் புத்தகங்களை மேற்கொள்காட்டி, அதனை வாங்கி மாணவர்களை படிக்க சொல்வது ஏன்? அதேபோல இன்ஜி., படிப்பு அந்தந்த ஊர்களில் இருக்க கூடிய தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது.அதனை திருத்தி ஒரே மாதிரியாக பாடத்திட்டம் கொடுக்கப்படும் என்பது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. இத்தகைய அவசர கதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்துவது கருணாநிதி நுாற்றாண்டு விழாவுக்காக எனவும், சிலரை திருப்திப்படுத்த உயர்கல்வித்துறை அமைச்சர் முயற்சிக்கிறார் எனவும் பொதுமக்கள், மாணவர்கள் கருதுகின்றனர். அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து இருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர், மாணவர்கள் நலனிலா, அக்கறை காட்டி விடப்போகிறார். எனவே, தமிழக அரசு கல்விதுறையில் எதேச்சதிகார போக்குடன் செயல்பட்டு மாணவர்களின் வாழ்க்கையை சிதைக்க வேண்டாம். பொதுப்பாட திட்ட முடிவை திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
