UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM
ADDED : ஜூலை 29, 2023 10:35 AM
காந்திகிராம பல்கலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் முதலில் பல்கலை அளவில் கூட்டுறவு துறையை ஒரு பாடமாக வழங்கிய காந்திகிராம பல்கலையில் தற்போது இளங்கலை வணிகவியல், முதுகலை வணிகவியல், கூட்டுறவில் முனைவர், முதுநிலை முனைவர் பட்ட படிப்புகளை வழங்குகிறது. தேசிய கொள்கை தயாரித்தல், உன்னத பாரத இயக்கம், மத்திய அரசின் ஊரக வளர்ச்சி திட்டங்களை மதிப்பீடு செய்தல், செஞ்சிலுவை சங்க பணிகளில் இத்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. ஜூலை முதல் வாரத்தில் டெல்லியில் பிரதமர் தலைமையில் நடந்த 17 வது கூட்டுறவு மாநாட்டில், ஒரு முதுகலை மாணவர் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது.மலேசியாவில், ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பன்னாட்டு கூட்டுறவு முகமை சார்பில் 4வது இளைஞர் உச்சி மாநாடு நேற்று முன்தினம் (ஜூலை 27ல்) துவங்கியது. ஜூலை 30 வரை நடக்க உள்ளது. இம்மாநாட்டில், 3 முதுகலை மாணவர்கள் (முதுகலை வணிகவியல் கூட்டுறவு மேலாண்மை துறை மாணவர்கள் ஆகாஷ் வரதன், ஷபானா, தேவி தீபிகா) பங்கேற்கின்றனர். தொழில் முனைவோருக்கான கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தும் விதம் குறித்து கருத்தரங்கில் விளக்கம் அளிக்க உள்ளனர். இந்தாண்டு தனியார் நுண்கடன் நிறுவனத்தில் 23 இளங்கலை மாணவர்கள் நிர்வாக உதவி அலுவலர்களாகவும், 5 முதுகலை மாணவர்கள் உதவி மேலாளர் பணிக்கும் தேர்வாகினர். இசாப் வங்கியில், 9 முதுகலை மாணவர்கள் பல்வேறு வங்கிப் பணியிடங்களுக்கு தேர்வாகினர் என குறிப்பிட்டுள்ளனர்.
