இன்ஜினியரிங் கவுன்சிலிங் முதல் சுற்று பதிவு நிறைவு
இன்ஜினியரிங் கவுன்சிலிங் முதல் சுற்று பதிவு நிறைவு
UPDATED : ஜூலை 31, 2023 12:00 AM
ADDED : ஜூலை 31, 2023 01:15 PM
சென்னை: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 442 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., பி.டெக்., படிப்பில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு, 1.88 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.அவர்களில் சிறப்பு பிரிவினருக்கு, 26ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிந்தது. பொது ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு, 28ம் தேதி ஆன்லைன் கவுன்சிலிங் துவங்கியது. இதில், 177 முதல் 200 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்ற, 22,761 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கான விருப்ப பாடம் பதிவு செய்யும் அவகாசம் நேற்று முடிந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு உத்தேச ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டை நாளை மாலை 5:00 மணிக்குள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். வரும் 2ம் தேதி காலை தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். ஒதுக்கீட்டை பெறும் மாணவர்கள், ஆக., 6 மாலை 5:00 மணிக்குள் கல்லுாரிகளில் சேர்ந்து இடத்தை உறுதி செய்ய வேண்டும்.தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பில் சேருவதற்கான, விருப்ப பதிவு அவகாசம் வரும் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீடு விபரம் 5ம் தேதி வெளியிடப்படுகிறது. ஒதுக்கீட்டு ஆணை, ஆக.,7 முதல், 11க்குள் வழங்கப்படும். ஆக.,11 மாலை, 5:00 மணிக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும் என, மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
