சம்பள முரண்பாட்டை நீக்காவிட்டால் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள்
சம்பள முரண்பாட்டை நீக்காவிட்டால் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள்
UPDATED : ஜூலை 31, 2023 12:00 AM
ADDED : ஜூலை 31, 2023 06:19 PM
நாமக்கல்:
இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்காவிட்டால், விரைவில் போராட்டம் நடத்துவோம் என, ஆசிரியர்கள் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.மாவட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் துவக்க விழா மற்றும் 10 வட்டாரங்களில் புதிய சங்க கிளைகள் துவக்க விழா, நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமை வகித்தார். மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில், நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, கபிலர்மலை, புதுச்சத்திரம், திருச்செங்கோடு, எருமப்பட்டி, பள்ளிபாளையம் உள்ளிட்ட, 10 வட்டாரங்களை சேர்ந்த கிளைகளின் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.தொடர்ந்து, சங்க மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட, 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம்பள விகிதம் நிர்ணயம் செய்தபோது, தவறுதலாக மிக குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதற்கு முன் இருந்த ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம், 8,370 ரூபாயாக இருந்தது. எங்களுக்கு, 5,200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களின் சம்பள நிர்ணயத்தில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கவே, நாங்கள் புதிய அமைப்பை துவக்கியுள்ளோம். விரைவில் எங்கள் சங்க மாநாட்டை சென்னையில் நடத்தி, தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளோம். அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.மாநில பொருளாளர் கண்ணன், துணைத்தலைவர் ஞானசேகரன், துணை செயலாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
