UPDATED : ஆக 01, 2023 12:00 AM
ADDED : ஆக 01, 2023 09:58 AM
துடியலுார்:
கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் ஐ.டி.ஐ., வளாகத்தை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.வெளி உலகில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. அதற்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு அரசு தொழில் பயிற்சி நிலைய ஆசிரியர்கள் உதவ வேண்டும். ஐ.டி.ஐ., வகுப்புகளில் சேர்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, மாணவர்களுக்கு விளக்கி கூற வேண்டும். திறன் வளர்ப்பு குறித்து, மாணவர்கள் நன்கு தெளிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தொழில் முனைவோர்களாக உருவெடுக்க முடியும் என அமைச்சர் மாணவர்களிடம் தெரிவித்தார். பள்ளிக்கு செல்லாமல் பாதியில் நின்றவர்கள், இறுதி வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவர்களையும் கண்டறிந்து, அவர்களுக்குரிய பாடப்பிரிவில் சேர்க்க வேண்டும் என, ஆலோசனை வழங்கினார். ஐ.டி.ஐ., வளாகத்தில் காம்பவுண்ட் சுவர் அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஐ.டி.ஐ., வளாகத்தில் உள்ள டாடா தொழில்நுட்ப மையத்தில் ரோபோ செயல்படும் விதம் குறித்து பார்வையிட்டார்.வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் வீரராகவராவ், மண்டல பயிற்சித்துறை இணை இயக்குனர் முஸ்தபா, கோவை அரசினர் ஆண்கள் தொழில் பயிற்சி நிலைய முதல்வர் லீமா ரோஸ், நிலைய மேலாண்மை குழு தலைவர் நரேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
