போட்டி தேர்வு அரசாணை ரத்து ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தல்
போட்டி தேர்வு அரசாணை ரத்து ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தல்
UPDATED : ஆக 02, 2023 12:00 AM
ADDED : ஆக 02, 2023 10:12 AM
சென்னை:
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பணியில் சேர போட்டி தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என, டிட்டோ ஜாக் அமைப்பின் பொதுச் செயலர் முத்துராமசாமி தெரிவித்தார்.தமிழக தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் கோரிக்கைகள் குறித்து, அதன் நிர்வாகிகளை அழைத்து, பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி, நேற்று பேச்சு நடத்தினார்.அமைப்பின் பொதுச் செயலர் முத்துராமசாமி கூறியதாவது:
பதவி உயர்வு பெறுவதற்கு, டெட் தேவையில்லை என்பது உள்ளிட்ட, 27 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளோம். மேலும் ஆசிரியர்களை வேதனைக்கு உள்ளாக்கும் திட்டமான, எண்ணும் எழுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணையை கைவிட வேண்டும். அரசு கல்வித்துறையிலுள்ள காலியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
