20 பல்கலைகள் போலியானவை பல்கலை மானிய குழு அறிவிப்பு
20 பல்கலைகள் போலியானவை பல்கலை மானிய குழு அறிவிப்பு
UPDATED : ஆக 03, 2023 12:00 AM
ADDED : ஆக 03, 2023 09:29 AM
புதுடில்லி:
நாட்டில், 20 பல்கலைகள் போலியானவை என்றும், இவை எந்த பட்டமும் வழங்க அதிகாரமில்லை என்றும், யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு அறிவித்துள்ளது.நம் நாட்டில் செயல்படும் போலி பல்கலைகள் குறித்த பட்டியலை, யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஜோஷி நேற்று வெளியிட்டார். இதன்படி, நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களில், 20 பல்கலைகள் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது. இதில் தலைநகர் புதுடில்லியில் மட்டும், 8 போலி பல்கலைகள் உள்ளன. அடுத்தபடியாக, உத்தர பிரதேசத்தில், 4; ஆந்திரா, மேற்கு வங்கத்தில் தலா 2; கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, புதுச்சேரியில் தலா ஒன்றும் போலி பல்கலை என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரியில் ஸ்ரீபோதி அகாடமி உயர் கல்வி பல்கலை இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.இது குறித்து, யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஜோஷி கூறியதாவது:
யு.ஜி.சி., சட்ட விதிகளுக்கு மாறாக, பல கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவது கவனத்திற்கு வந்தது. அத்தகைய பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள், உயர் கல்வி அல்லது வேலைவாய்ப்பு நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்படாது. இந்தப் பல்கலைகள் எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
