UPDATED : ஆக 04, 2023 12:00 AM
ADDED : ஆக 04, 2023 10:46 AM
தமிழக பள்ளிக்கல்வி துறை பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் மாறும்போது, மாற்று சான்றிதழ் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ்களும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழும் வழங்கப்படுகின்றன.இந்த சான்றிதழ்களை, மாணவர்கள் பலர் லேமினேஷன் செய்வதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஆசிரியர்கள் வழியே கல்வி துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். அதன் விபரம்:
அரசு தேர்வுத்துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை, சில மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர், லேமினேஷன் செய்வதாக தெரிகிறது. சான்றிதழ்களில் தண்ணீர் அல்லது வேறு துாசிகளால், கிழிந்து விடாமல் இருக்க, இவ்வாறு செய்கின்றனர். ஆனால், சான்றிதழ்களை லேமினேஷன் செய்யாமல் இருந்தால் மட்டுமே, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பணிகளில், எதிர்காலத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கும், சான்றிதழ்களின் பின்புறம் அரசு முத்திரை வைக்கவும் முடியும். அந்த நேரத்தில், லேமினேஷனை பிரிக்க நேர்ந்தால், சான்றிதழ் சிதைந்து விடும். எனவே, சான்றிதழ்களை லேமினேஷன் செய்யாமல், அதன் அசல் தன்மையுடன் பாதுகாப்பது சிறந்தது.
