UPDATED : ஆக 04, 2023 12:00 AM
ADDED : ஆக 04, 2023 10:34 AM
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைக்கான கல்வி உதவி தொகை திட்ட விண்ணப்பம், ஆலோசனை வழங்க அலுவலரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் நல அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, மாவட்ட அளவில் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தை அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படிக்க அரசு மாதம் ரூ.4,000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருமானம், இறப்பு சான்று, கல்வி சான்று, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் கார்டு, பிறப்பு சான்று, ரேஷன் கார்டு நகல்களுடன் மீண்டும் இந்த அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.விசாரணைக்கு பின் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் வங்கி கணக்கில் மாதம் ரூ.4,000 வீதம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தையும், கூடுதல் விபரங்களை பெற பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளின் ஆதரவாளர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு செல்கின்றனர். ஆனால், அங்கு இதற்கான அலுவலரின்றி, உதவியாளர்களே துண்டு சீட்டில் இக்கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான சான்று குறித்த விபரங்களை தருகின்றனர். அதற்கு பின்னர் குழந்தைகளின் ஆதரவாளர்கள் மனுவாக எழுதி, இச்சான்றுடன் விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவித்து அனுப்புகின்றனர். இந்த பிரிவுக்கான அலுவலர் பணியிடம் காலியாகவே இருப்பதால், உதவியாளர்களே கல்வி உதவி தொகைக்கான துண்டு சீட்டை மட்டும் கொடுத்து அனுப்பி விடுகின்றனர். எப்படி கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும் என தெரியாமல் குழந்தைகளின் ஆதரவாளர்கள் தவித்து வருகின்றனர். துண்டு சீட்டில் சான்று பட்டியல்:
மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் துரைமுருகன் கூறியதாவது, குழந்தைகளின் ஆதரவாளர்கள் கைப்பட மனு எழுதி, நாங்கள் வழங்கும் துண்டுசீட்டில் உள்ள சான்றுகளுடன் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்து வருகிறோம், என்றார். இந்த அலுவலகத்தில் குழந்தைகள் நல கவுன்சிலர்கள் 10 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களில் சிலரை கூட கல்வி உதவி தொகைக்கு விபரம் கேட்டு வரும் குழந்தைகளின் ஆதரவாளர்களுக்கு விபரம் தெரிவிக்க நியமிக்கலாம் என பெற்றோர் தெரிவித்தனர்.
