முதல்வர் திறனாய்வு தேர்வு பள்ளிகளில் பயிற்சிக்கு உத்தரவு
முதல்வர் திறனாய்வு தேர்வு பள்ளிகளில் பயிற்சிக்கு உத்தரவு
UPDATED : ஆக 06, 2023 12:00 AM
ADDED : ஆக 06, 2023 09:58 AM
கோவை:
புதிதாக அறிவிக்கப்பட்ட, தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்விற்கு, அதிக மாணவர்கள் விண்ணப்பிக்க ஊக்குவிப்பதோடு, பள்ளிகளில் பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் தலா, 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவியருக்கு, ஆண்டுக்கு 10 ஆயிரம் வீதம், இளநிலை பட்டப்படிப்பு முடியும் வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமே இத்தேர்வில் பங்கேற்க முடியும். ஒன்பது, பத்தாம் வகுப்பு மாநில பாடத்திட்டம் அடிப்படையில், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேள்விகள் இடம்பெறும். காலை, மதியம் இரு தாள்களாக தேர்வு நடத்தப்படும். இதற்கு, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பு அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களை ஊக்குவிக்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதோடு, அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் இடம்பெறுவதால், தேர்வுக்கு பள்ளிகளிலே பயிற்சி அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.
