ஒரு மாணவரை மற்ற மாணவருடன் ஒப்பிடாதீர்கள்: அமைச்சர் அறிவுரை
ஒரு மாணவரை மற்ற மாணவருடன் ஒப்பிடாதீர்கள்: அமைச்சர் அறிவுரை
UPDATED : ஆக 06, 2023 12:00 AM
ADDED : ஆக 06, 2023 10:04 AM
கோவை:
பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளியின் நுாறாவது ஆண்டு தொடக்கவிழா, பள்ளி வளாகத்தில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.விழாவில் தலைமை ஏற்று, பி.எஸ்.ஜி., அறநிலைய நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளி, 7 ஆசிரியர்கள், 170 மாணவர்களோடு தொடங்கப்பட்டது. இன்று 81 ஆசிரியர்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களோடு விரிவடைந்துள்ளது. பெற்றோர் இல்லாத மாணவர்களுக்காக, இங்கு மாணவர் இல்லம் செயல்படுகிறது. தற்போது 200 பேர் இலவசமாக தங்கி படிக்கின்றனர். இதுதவிர, சிறப்பு குழந்தைகளுக்காக, விஷ்ணு கிராந்தி பள்ளியும் செயல்படுகிறது. நுாறாவது ஆண்டு நினைவாக ஐந்து அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அடிப்படை வசதிகள் செய்து தரஉள்ளோம், என்றார்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
எல்லாருக்கும் எல்லாம் என்பதை அடையாளப்படுத்த, சர்வஜன பள்ளி என்ற பெயரிட்டிருப்பது கூடுதல் சிறப்பு. நுாறு ஆண்டுக்கால வரலாற்றின் சாட்சி இந்நிறுவனம். இங்கு படித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் ஆளுமைகளாக விளங்கி வருகின்றனர். மாணவர்களின் வளர்ச்சியில், பெற்றோர், ஆசிரியர்களுக்கு கூட்டு பொறுப்புணர்வு உள்ளது. ஒரு மாணவரை மற்றொருவரோடு ஒப்பிடாமல் அவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து பயிற்சி வழங்க, ஆசிரியர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு, அமைச்சர் மகேஷ் பேசினார். முன்னதாக, தலைமையாசிரியர் சசிகுமார் வரவேற்றார்.பி.எஸ்.ஜி., அறக்கட்டளை செயலாளர் நாராயணசுவாமி, கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
