UPDATED : ஆக 10, 2023 12:00 AM
ADDED : ஆக 10, 2023 09:24 AM
புதுடில்லி:
டில்லி அரசு மருத்துவமனைகளில் மூத்த டாக்டர்கள் 263 பேருக்கு, தலைமை மருத்துவ அதிகாரியாக பதவி உயர்வு அளிக்க துணை நிலை கவர்னர் சக்சேனா நேற்று ஒப்புதல் அளித்தார்.இதுகுறித்து, ராஜ் நிவாஸ் அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில் 2018 முதல் பதவி உயர்வுகள் நிலுவையில் உள்ளன. அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வுகளை, உடனுக்குடன் வழங்க வேண்டும் என கவர்னர் சக்சேனா வலியுறுத்தினார். இதையடுத்து, மருத்துவத் துறையில் இருந்து கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை, குரு தேக்பகதுார் மருத்துவமனை, லோக் நாயக் மருத்துவமனை, பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனை, தீப் சந்த் பந்து மருத்துவமனை, அருணா ஆசப் அலி அரசு மருத்துவமனை மற்றும் ஜி.பி. பந்த் மருத்துவமனை உள்ளிட்ட டில்லி அரசு நடத்தும் மருத்துவமனைகளில், 263 மூத்த டாக்டர்களை, தலைமை மருத்துவ அதிகாரியாக பதவி உயர்த்த கவர்னர் சக்சேனா ஒப்புதல் அளித்து நேற்று கையெழுத்திட்டார். டில்லி கவர்னராக சக்சேனா பதவியேற்றதில் இருந்து, புதிய நியமனம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
