UPDATED : ஆக 10, 2023 12:00 AM
ADDED : ஆக 10, 2023 09:44 AM
சென்னை:
சென்னை பல்கலை துணை வேந்தர் மீதான நிதி முறைகேடு குறித்த விசாரணைக்கு, கவர்னர் அனுமதிக்காக அரசு காத்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.சென்னை பல்கலை துணை வேந்தர் கவுரி, 2012 முதல், 2020 வரை, அண்ணா பல்கலை வளாகத்தில் இயங்கும் மத்திய அரசின் கல்வி மற்றும் மல்டி மீடியா ஆராய்ச்சி மையமான இ.எம்.எம்.ஆர்.சி., இயக்குனராக பணியாற்றியுள்ளார். அப்போது, ஆராய்ச்சி மையத்தின் வங்கி கணக்கில் இருந்து, 1.31 கோடி ரூபாய் பணம் எடுத்ததாகவும், அண்ணா பல்கலை நிர்வாக அனுமதி பெறாமல், 1.61 கோடி ரூபாய்க்கு கேமரா உபகரணங்கள் கொள்முதல் செய்ததாகவும், புகார் கூறப்பட்டது.இதுகுறித்து, அண்ணா பல்கலை விசாரணை நடத்துமாறு, உயர் கல்வித் துறை சார்பில், கடந்த 2021ல் கடிதம் எழுதப்பட்டது. அண்ணா பல்கலைக்கு, கவுரி விளக்க கடிதம் அளித்ததும், விசாரணை கைவிடப்பட்டது. பின், கவுரியிடம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த அனுமதிக்குமாறு, கவர்னருக்கு, உயர் கல்வித் துறை சார்பில் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதற்கு, கவர்னரிடம் இருந்து, எந்த அனுமதியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், துணை வேந்தர் கவுரியின் பதவிக் காலம், வரும் 20ம் தேதி முடிகிறது. இதையொட்டி, அவர் மீதான முறைகேடு புகார்கள், சமூக வலைதளங்களில், பேராசிரியர்களால் பரப்பப்பட்டு வருகின்றன.விதிமீறல் இல்லை!
துணை வேந்தர் கவுரி கூறியதாவது:
இ.எம்.எம்.ஆர்.சி., மையம், மத்திய அரசின் யு.ஜி.சி.,க்கு கட்டுப்பட்டது. நாடு முழுதும், 21 இடங்களில் இந்த மையங்கள் செயல்படுகின்றன. இவற்றின் செயல்பாடுகள், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., விதிப்படி நடக்கும். அதன்படியே கேமராக்கள் வாங்கப்பட்டன. இதற்கு, நிர்வாக குழு, சிண்டிகேட் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய கணக்கு தணிக்கை துறையான சி.ஏ.ஜி., அலுவலகத்திலும் விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. நிதி தொடர்பான காசோலையில், நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற, இரண்டு பேர் கையெழுத்திட்டு, உரிய பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து, சென்னை பல்கலை சிண்டிகேட்டில் வெளிப்படையாக விவாதித்து, ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன; எந்த விதிமீறலும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
