UPDATED : ஆக 10, 2023 12:00 AM
ADDED : ஆக 10, 2023 09:53 AM
மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களிலும், தமிழகத்தின் சீர்மிகு சட்ட கல்லுாரி மற்றும் கட்டட அமைப்பியல் கல்லுாரியிலும், பட்டப்படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்கள், 225 பேர் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கான பாராட்டு விழா, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நேற்று நடந்தது.இதில், மாணவர்களை வாழ்த்தி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக மாணவர்கள் உயர் கல்விக்கு செல்லும் வகையில், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண் மற்றும் அனைவருக்கும் ஐ.ஐ.டி., போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்படி, உயர் கல்வி நிறுவனங்கள், அவற்றில் சேர விண்ணப்பிப்பது எப்படி, போட்டி தேர்வுக்கு படிக்கும் முறை போன்றவை குறித்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டப்பட்டது. அதன் பலனாக இந்த ஆண்டு, 225 பேர், மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர உள்ளனர்.முதன்மையான உயர் கல்வி நிறுவனங்களில், கடந்த ஆண்டு, 75 பேர் சேர்ந்தனர். இந்த ஆண்டு, 225 பேர் சேர்ந்து உள்ளனர். ஐ.ஐ.டி.,யில் மட்டும், ஆறு பேர் சென்றுள்ளனர். தமிழகத்தில், 38 மாவட்டங்களிலும் மாதிரி பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. அங்கிருந்து தான் இந்த மாணவர்கள், முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு படிக்க சென்றுள்ளனர். இந்த மாணவர்களின் படிப்பு செலவை, அரசு ஏற்றுள்ளது. வரும் ஆண்டுகளில், இந்த மாணவர்கள் தான், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அரசு ஏற்படுத்தி தரும் வாய்ப்புகளை, மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். படிக்கும் காலத்தில் கவனச்சிதறல் இருக்கக் கூடாது. பெற்றோர், ஆசிரியர்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த விழாவில், அமைச்சர்கள் மகேஷ், சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, பள்ளிக் கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, இயக்குனர் அறிவொளி, முறைசாரா கல்வி பிரிவு இயக்குனர் பழனிசாமி, மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன் பங்கேற்றனர்.
